

போஸ் வெங்கட் இயக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘கன்னிமாடம்’ மற்றும் ‘சார்’ ஆகிய படங்களை இயக்கியவர் போஸ் வெங்கட். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், தனது அடுத்த இயக்கத்துக்காக கதையும் எழுதி வந்தார். தற்போது அவரது அடுத்த படத்தை கண்ணன் ரவி மற்றும் வி.மதியழகன் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
விளையாட்டு, காதல், குடும்பம், சமூகம் உள்ளிட்ட பல விஷயங்களை இப்படத்தின் மூலம் பேசவுள்ளார் போஸ் வெங்கட். இதற்கு இசையமைப்பாளராக யுவன் பணிபுரியவுள்ளார். இப்படம் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகும் 7-வது படமாகும். இப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறவுள்ளது.
இப்படம் குறித்து போஸ் வெங்கட், “விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.