

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் கொச்சி வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டிலிருந்து 4 யானை தந்தங்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய லைசென்ஸ் பெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக மோகன்லால் மற்றும் அவருக்குத் தந்தங்களைக் கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வனத்துறை சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தந்தங்களை வைத்திருக்க மோகன்லாலுக்கு, கடந்த 2015-ம் ஆண்டு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.
இதை எதிர்த்து எர்ணாகுளத் தைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி மோகன்லால் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, யானை தந்தங்களை வைத்திருக்க மோகன்லாலுக்கு அனுமதியளித்த அரசின் உத்தரவில் நடைமுறை பிழைகள் இருப்பதாகவும் அந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இப்பிரச்சினையை காரணம் காட்டி, அந்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அது தொடர்பாக புதிய ஆணையை வெளியிட எந்த தடையுமில்லை என்று உத்தரவிட்டு உள்ளது.