

தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு என்று உருவான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ‘ஓஜி’ இயக்குநர் சுஜித்.
அக்டோபர் 23-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படம் ‘ஓஜி’. திரையரங்கில் இப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனிடையே, சில தினங்களாக தயாரிப்பாளர் தனய்யா மற்றும் இயக்குநர் சுஜித் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்படத்தின் இறுதிகட்டப் பணிகளை தனது சொந்த பணத்திலேயே இயக்குநர் முடித்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
இந்த முரண்பாடால் மட்டுமே நானி படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து தனய்யா விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியிட்டார்கள். இது இணையத்தில் வைரலானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுஜித்.
அதில், “நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்டு செல்ல என்ன தேவை என்பதை மிகச் சிலரே உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள்.
எனது தயாரிப்பாளரும், படக்குழுவினரும் ‘ஓஜி’ படத்துக்காக காட்டிய நம்பிக்கையையும் வலிமையையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதுதான் இன்று இந்தப் படத்திற்கு அதன் பலத்தைத் தருகிறது. இது யாருக்கும் எளிதாக இருந்ததில்லை, ஆனால் ஒவ்வொரு முயற்சியும் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தது. அதன் செயல்முறையை மதிக்க வேண்டும். தனய்யா காருவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுஜித். இதன் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்குm முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.