

துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பைசன்: காளமாடன்’. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் அக்.17-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படம் பற்றி துருவ் விக்ரம் கூறியதாவது: இது ஸ்போர்ட்ஸ் டிராமா கதை. திருநெல்வேலி அருகே கதை நடக்கிறது. இதற்காகக் கதை நடக்கும் கிராமத்துக்கே சென்று தங்கி, அங்குள்ளவர்களுடன் பழகி, இதில் நடித்துள்ளேன். முன்னதாக பல மாதங்கள் கபடி பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்துக்காக 2 வருடங்களுக்கு மேல் திருநெல்வேலி பகுதியிலேயே வசித்ததால், இப்போதும் அந்த பேச்சு வழக்குதான் வருகிறது. கதைக்காக அத்லெட்டிக் பயிற்சி பெற்றேன். நிஜமான ஒரு கபடி வீரராக இந்தப் படத்தில் பங்கேற்றேன். என்னுடன் விளையாடியவர்கள், என்னை ஒரு நடிகனாகவோ, நடிகர் விக்ரம் மகனாகவோ பார்க்கவில்லை.
அவர்களில் ஒருவனாகவே பார்த்து, அப்படியே நடந்துகொண்டார்கள். அங்கு எல்லோருமே கபடி விளையாடுகிறார்கள். நான் புதிதாகக் கற்றுக் கொள்கிறவன் என்பதால் எனக்குக் காயங்களும் ஏற்பட்டன. கபடி பயிற்சி முடிந்து, நீச்சல், மண் வெட்டுவது, மரம் வெட்டுவது, மாடு மேய்ப்பது, ஆடு மேய்ப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்யச் சொன்னார், இயக்குநர். அதைச் செய்தால், கபடி விளையாடுவது இன்னும் இயல்பாக மாறும் என்றதால், அதைச் செய்தேன். முதலில் எனக்கு அது சவாலாக இருந்தது. பிறகு பழகி விட்டது. அதை அனுபவித்து செய்தேன்.
இந்தப் படத்துக்காக நிறைய உழைத்திருக்கிறேன். என்னை நிரூபிக்க வேண்டியிருப்பதால். அதற்கான உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும். இவ்வாறு துருவ் விக்ரம் கூறினார்.