

‘பைசன்’ தான் எனது முதல் படம் என்று துருவ் விக்ரம் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து துருவ் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் ‘பைசன்’ அறிமுக விழா ஒன்றில் “இது தான் எனது முதல் படம்” என்று பேசினார் துருவ் விக்ரம். அப்படியென்றால் ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ படங்கள் என்னவென்று இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
இது தொடர்பாக துருவ் விக்ரம் அளித்த பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், “’ஆதித்யா வர்மா’, ‘மகான்’ ஆகிய படங்கள் ரீமேக். அதற்கு ஏற்கனவே குறிப்புகள் இருந்தன. விஜய் தேவரகொண்டா சார் நடித்த படத்தினை எப்படி இங்கு செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தான் இருந்தது. அது என் முதல் படமாக இருந்தாலும், அதற்கு முன் குறிப்புகள் இருந்ததால், அப்படத்தினை என் முதல் படமாக பார்க்க முடியாது.
‘மகான்’ படத்தை பொறுத்தவரை அது அப்பாவின் படம். கார்த்திக் சுப்பராஜ் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர். அவருடைய பீட்சா மற்றும் ஜிகர்தண்டா எனக்கு ரொம்ப பிடித்த படங்கள். மகான் படத்தில் எனக்கு சின்ன ரோல். ஆகையால் எனது அடுத்த படத்தினை தான் முதல் படமாக பார்க்க தொடங்கினேன். ‘பைசன்’ படத்துக்குள் வந்து அந்த கதாபாத்திரத்தை இயல்பாக நடிப்பதற்கு, ஒரு நடிகராக என்னவாக இருக்கிறேன் என்பதை மறக்க வேண்டியதாக இருந்தது.
இந்தப் பயணத்தில் என்னை நான் தொலைத்திருக்கிறேன். ஏனென்றால் இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறேன். அந்த வார்த்தைகளை சொல்வதற்கு முன் நான் விளக்கமாக முன்கதையோடு சொல்லியிருக்க வேண்டும்” என்று விளக்கமளித்துள்ளார் துருவ் விக்ரம்.