Published : 21 Jul 2018 14:48 pm

Updated : 21 Jul 2018 14:48 pm

 

Published : 21 Jul 2018 02:48 PM
Last Updated : 21 Jul 2018 02:48 PM

“ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்” - கஸ்தூரி

‘ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்’ என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இதுகுறித்துப் பெரிதாக யாரும் வாய் திறக்காத நிலையில், ‘ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்’ எனத் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.


ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுதான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. ஆனால், அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.

ஸ்ரீரெட்டியின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான். லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். கொடுப்பதே லஞ்சம், இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது...

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும், ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து, பிறகு அடுத்த ஊரிலும் அதே தவறையே மறுபடி மறுபடி செய்வதற்குப் பெயர் என்ன?

குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன் தரவில்லை. அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? அப்படியென்றால், சினிமாவுக்குத் தேவையான தகுதியோ, திறமையோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண் யோசித்ததாகவே தெரிகிறது. தகுதிக்கு மேல் பேராசைப்பட, சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும். எல்லோருக்கும் அது கை கூடாது.

திருடித் தின்பது சுலபமென்றால், எல்லோரும் திருடர்களாகத்தான் இருப்பார்கள். நேர்வழிதான் கடைசியில் நிலைக்கும் என்பதை, பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நம் முன்னோர்கள் நமக்கு அதைச் சொல்லித்தந்து போயிருக்கிறார்கள். அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம். ஆனால், என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும்.

ஸ்ரீரெட்டி செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று, அவர் இன்றுவரை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. அவர் சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு, ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இல்லை, அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு இணங்கிதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார். சினிமாவை மிகத் தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறார் .

இணங்கினால்தான் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னைப் போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு... சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா?

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். நான் ஒரு பெரிய நடிகருடன் கதாநாயகியாக நடித்த படம் . அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு. ஜனத்திரள் மிகுந்த காட்சி. அங்கே, ஒரு டீன் ஏஜ் பெண்... ஸ்டைலான, நாகரிகமான அழகிய பெண், நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்கிறார். வேறு பக்கம் அமர்ந்திருந்த என் காதில் அவர்கள் பேச்சு தெளிவாகக் கேட்டது.

பெண்: சார்... நான் உங்க பெரிய ரசிகை . உங்களோட தனியா பேச முடியுமா?

நடிகர்: தனியாவா? இங்கேயே சொல்லுமா

பெண்: உங்க கூட நடிக்கணும் சார். அதுக்கு நான் என்ன வேணா பண்ணத் தயாரா இருக்கேன் சார்.

நடிகருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. எனினும் குரலை உயர்த்தாமல் மிகக் கடுமையான தொனியில் சொன்னார். “பைத்தியமா உனக்கு? படிக்கிற பொண்ணு பேசுற பேச்சா இது? என்னை என்னானு நினைச்சுப் பேசுறே? என்கிட்டே சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் போய் பேசிடாத. இடியட், உங்க அப்பா - அம்மாவுக்குத் தெரியுமா உன் சினிமா ஆசை? நீ ஒரு குழந்தை, சினிமாவுக்கு நீ பொருத்தமாக இருக்க மாட்டாய். மொதல்ல ஊரு போய் சேரு. படிக்கிற வேலையப் பாரு. மறுபடியும் இதுபோல் யோசிக்காதே...”

இன்றும் எனக்கு அந்த ஹீரோவின் சொற்கள் நன்றாக நினைவில் உள்ளன. இத்தனைக்கும் அந்த ஹீரோ தொடர்ச்சியாக அவதூறில் மாட்டியவர்தான். ஆனால், யாரையும் ஏமாற்றுமளவுக்கு கேவலமான எண்ணம் கொண்டவர் இல்லை.

எதற்கு சொல்கிறேன் என்றால், சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஏமாற்றுபவர்கள் கூட எல்லோரிடமும் வம்புக்குப் போக மாட்டார்கள். நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துதான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி


தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x