Published : 16 Aug 2014 08:17 AM
Last Updated : 16 Aug 2014 08:17 AM

இயக்குநர் பாலசந்தரின் மகன் பால கைலாசம் மரணம்

இயக்குநர் கே.பாலசந்தரின் மகன் பால கைலாசம் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 54.

இயக்குநர் கே.பாலசந்தரின் மூத்த மகன் பால கைலாசம். ‘பி.கே’ என்று திரையுலகில் எல்லோராலும் அழைக்கப்பட்டவர். பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த அவர், அமெரிக்கா சென்று ஆடியோ சவுண்ட் துறையில் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து சென்னை திரும்பியதும் ‘மின்பிம்பங்கள்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். சின்னத்திரையில் ‘ரயில் ஸ்நேகம்’, ‘மர்மதேசம்’, ‘கையளவு மனசு’ உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவர் சின்னத்திரையில் தயாரித்த பெரும்பாலான சீரியல்களை அவரது தந்தை கே.பாலசந்தர், நாகா போன்றவர்கள் இயக்கினர்.

சினிமாவில் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை பாலசந்தர் அறிமுகப்படுத்தியதுபோல, சின்னத்திரையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை பி.கே.க்கு உண்டு.

சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலகட்டத்திலேயே சின்னத்திரை தொடர் தயாரித்தவர். தொலைக் காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடக்க காலத்தில் ‘லைவ் சவுண்ட்’ என்ற தொழில் நுட்பத்தை சின்னத்திரையில் கொண்டுவர ஊக்குவித்தவர். இந்திரா சவுந்தர்ராஜன் போன்றவர் களின் கதைகளை தரமான சின்னத்திரை தொடர்களாகக் கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆலோசகராக இருந்தார்.

இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப் பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெள்ளிக்கிழமை மதியம் அவர் காலமானார்.

பால கைலாசத்தின் உடல் மயிலாப்பூரில் கே.பாலசந்தரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மறைந்த பால கைலாசத்துக்கு கீதா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

‘மின்பிம்பங்கள்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் கைலாசம். சின்னத்திரையில் ‘ரயில் ஸ்நேகம்’, ‘மர்மதேசம்’, ‘கையளவு மனசு’ உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவர் சின்னத்திரையில் தயாரித்த பெரும்பாலான சீரியல்களை அவரது தந்தை கே.பாலசந்தர், நாகா போன்றவர்கள் இயக்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x