கார்த்தி - தமிழ் இணையும் ‘மார்ஷல்’ என்ன ஸ்பெஷல்?

கார்த்தி - தமிழ் இணையும் ‘மார்ஷல்’ என்ன ஸ்பெஷல்?

Published on

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். ‘சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால் இதன் படப்பிடிப்புக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

மேலும், 1960-களில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இதற்கு ‘மார்ஷல்’ என தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. 1960-களில் நடக்கும் கதை என்பதால், படத்தின் பூஜையையும் அந்தக் காலகட்டத்தின் அரங்குகளை அமைத்து நடத்தியிருக்கிறது படக்குழு.

‘மார்ஷல்’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக அருண் வெஞ்சரமூடு ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஓய் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதனை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in