விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

தருமபுரி அருகே சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு

Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். நடிகர் மற்றும் அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ(43). இவர் தன் தந்தை சிபி சாக்கோ, தாய் மரியம் கார்லஸ் மற்றும் தன் சகோதரர் ஜோக்கர் ஷாக் (36) ஆகியோருடன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று இரவு கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் நோக்கி காரில் பயணித்தார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அனீஸ் (42) காரை ஓட்டிச் சென்றார்.

இவர்களது கார் இன்று அதிகாலை தருமபுரியை கடந்து பாலக்கோடு வழியாக செல்லும் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கொம்பநாயக்கனஅள்ளி அருகே சென்றபோது பாறையூர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி உருக்குலைந்தது.

இந்த விபத்தில் நடிகர் டாம் சாக்கோவின் தந்தை சிபி டாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in