“சித்த மருத்துவர் என்று சொல்லி வந்தவர் 2 மணி நேரம் இழுத்தடித்து விட்டார்” - நடிகர் ராஜேஷின் சகோதரர் வேதனை

“சித்த மருத்துவர் என்று சொல்லி வந்தவர் 2 மணி நேரம் இழுத்தடித்து விட்டார்” - நடிகர் ராஜேஷின் சகோதரர் வேதனை
Updated on
1 min read

“நாங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் என் அண்ணன் ராஜேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்போம். அவருக்கு எதுவும் ஆகியிருக்காது. சித்த மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் கதை பேசிக் கொண்டே 2 மணி நேரத்தை இழுத்தடித்து விட்டார்” என்று நடிகர் ராஜேஷின் தம்பி சத்யன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சத்யன் கூறியதாவது: “என் அண்ணன் ராஜேஷ் இறப்பதற்கு முன் அதிகாலையில் நாங்கள் அவருடைய பக்கத்தில் இருந்திருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்போம். அவருக்கு எதுவும் ஆகியிருக்காது. சித்த மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் கதை பேசிக் கொண்டே 2 மணி நேரத்தை இழுத்தடித்து விட்டார். 6 மணிக்கு வந்தவர் 8 மணி வரை பேசிக் கொண்டே இருந்தார். அதன்பிறகுதான் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்படி தாமதித்ததுதான் பெரிய தவறாகி விட்டது. அவர் விஷயதாரி என்பதால் நாங்களும் அவரை துரிதப்படுத்தாமல் இருந்துவிட்டோம். அது எங்களுடைய தவறுதான். அவருடைய அலட்சியப் போக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது.

இனிமேல் இது போன்று எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நெஞ்சு வலிக்கிறது என்று அவர் கூறவில்லை. இரவு முழுவதும் தூக்கம் இல்லை. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக சொன்னார். உடனே மருத்துவமனைக்கு செல்லலாம் என்று சொன்னபோது, நம்மிடம்தான் எல்லா கருவிகளும் இருக்கிறதே என்று கூறி அவரே பல்ஸ் பார்த்தார். நன்றாகத்தான் இருந்தார். மருத்துவரை வீட்டுக்கு அழைத்து வந்து பார்க்கச் செய்யலாம் என்பதற்காக அவரை அழைக்க நான் சென்றேன். ஆனால் பாதி வழியில் நான் சென்று கொண்டிருந்த போதே என் அண்ணன் மகன் போன் செய்து அப்பா நன்றாக இருக்கிறார் என்று என்னை திரும்பி வரச் சொல்லிவிட்டான். அதுதான் மிகப்பெரிய தவறாகி விட்டது. மருத்துவர் வந்திருந்தால் அவருக்கு அந்த தீவிரம் புரிந்திருக்கும்” இவ்வாறு சத்யன் தெரிவித்தார்.

நடிகர் ராஜேஷ் இன்று (மே 29) காலை காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜேஷ் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர். ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in