பெருமாளை இழிவுபடுத்தியதாக நடிகர் சந்தானம் மீது இந்து முன்னணி புகார்!

நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

கோவை: பெருமாளை இழிவுபடுத்தியதாக நடிகர் சந்தானம் மீது, கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.தசரதன், செய்தித் தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அதில், “இன்று காலை நாங்கள் இணையதளத்தை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது யூடியூப்பில் உள்ள ஒரு லிங்க்கில் திரைப்பட நடிகர் சந்தானம் நடித்த ஒரு படத்தின் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அந்தப் பாடலில், இந்து மக்கள் வணங்கும் வெங்கடேச பெருமாளின் பாடல் கேலி, கிண்டல் செய்து பாடப்பட்டு இருந்தது. இது இந்து மதத்தின் மீதும், இந்து தெய்வத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட எங்களுடைய மனதை புண்படும்படியாகவும், இந்து மக்கள் வணங்கும் பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தது.

இந்து மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், இந்தப் பாடல் உள்ளது. எனவே, இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளான பெருமாளையும் இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட திரைப்பட நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

சந்தானம் சொல்வது என்ன? - சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா வழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் கூறும்போது, “நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. பெருமாளை எனக்குப் பிடிக்கும்” என்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in