Last Updated : 08 May, 2025 08:15 PM

3  

Published : 08 May 2025 08:15 PM
Last Updated : 08 May 2025 08:15 PM

கரையான் அரித்த பணம்: ஏழைப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

சென்னை: சிவகங்கை அருகே கூலித்தொழிலாளி பெண்ணின் சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அப்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி குமார் - முத்துக்கருப்பி. கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, அந்த சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்ததை எண்ணிப்பார்த்து தெரிந்துகொண்ட அவர் மீண்டும் அந்த உண்டியலை புதைத்து வைத்துள்ளார். பின்னர், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அந்த தகர உண்டியலுக்குள் கரையான்கள் புகுந்து ரூபாய் நோட்டுக்களை அரித்துள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தகர உண்டியலை முத்துக்கருப்பி திறந்து பார்த்தபோது, அந்த பெட்டியில் இருந்து சேமிப்பு பணம் முழுவதையும் கரையான்கள் அரித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால், செய்வதறியாது திகைத்த முத்துக்கருப்பி, கரையான் அரித்த ரூபாய் நோட்டுக்களுடன் தனது குழந்தைகளுடன் அழுது புலம்பும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், கரையான் அரித்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றித் தருவதற்கான பரிந்துரைகளை வங்கி மூலம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ராகவா லாரனஸ், குமார் - முத்துக்கருப்பி தம்பதியை சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து, ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இந்த காணொளியை அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்ட அந்த தம்பதி, கண்ணீர் மல்க ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இக்காணொளியை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு, நடிகர் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x