Published : 04 May 2025 06:55 AM
Last Updated : 04 May 2025 06:55 AM

ரெட்ரோ: திரை விமர்சனம்

பிறந்தது முதல் சிரிக்கும் உணர்ச்சியை இழந்துவிட்ட சிறுவன் பாரிவேல் (சூர்யா), தூத்துக்குடியில் கேங்ஸ்டராக இருக்கும் திலகனிடம் (ஜோஜூ ஜார்ஜ்) வளர்கிறான். அவன், தனது 14 வயதில் ருக்மணி (பூஜா ஹெக்டே) என்ற சிறுமியை காசியில் சந்தித்துப் பிரிகிறான். 14 ஆண்டுகள் கழித்து பாரியை அவள் அடையாளம் கண்டுகொள்கிறாள்.

பால்யத்தில் துளித்த காதல், இப்போது செழித்து வளர, ருக்மணிக்காக கேங்ஸ்டர் வாழ்க்கையைத் துறந்து, திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். திருமணத்தன்று நடக்கும் அப்பா - மகன் மோதலில், திலகனின் கையை வெட்டிவிட்டு சிறை செல்கிறான் பாரி. பின் சிறையில் இருந்து தப்பித்து அந்தமான் தீவுக்கு, மனைவியைத் தேடிப் போகிறான். அங்கே அவளுடன் இணைந்தானா? அந்தத் தீவுக்கும் பாரிக்கும் என்ன தொடர்பு? அப்பா -மகன் மோதல் ஏன் ஏற்பட்டது என பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

பால்யத்தில் தாயையும், தன் இனக்கூட்டத்தையும் பிரிந்து, முரடனாக வளரவேண்டிய ஒருவனுக்கு, காதலால் தன்னை மீட்டுக்கொள்ளப் போராடும் அந்த கேங்ஸ்டருக்கு, காலம் என்ன வேலை வைத்திருந்தது என்கிற கதாபாத்திரத்தை, சூர்யாவுக்காக எழுதியிருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ். அக்கதாபாத்திரத்தின் ஊசலாட்டம், போராட்டம், தோல்வி, எழுச்சி என அத்தனைப் பரிமாணங்களுக்கும் சூர்யா கொட்டியிருக்கும் உழைப்பு, அவர் வரும் பிரேம்களில் தெரிகிறது.

மனைவி தத்தெடுத்த பாரியை மகனாக ஏற்காமல், அதேநேரம், பாரியின் பராக்கிரமத்தைத் தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு ‘மவனே நீ என்னோட இரும்புக் கைடா’ என பாரியை ஏற்றுக்கொள்வதுபோல் பாசாங்கு காட்டும் இரட்டை அணுகுமுறையைக் கொண்டிருக்கும் ஜோஜு ஜார்ஜ், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதைவிட அட்டகாசமான குழைவையும் முறுகலையும் இணைவையும் தக்க வைத்துக்கொள்கிறது சூர்யா - பூஜா ஹெக்டே காதல் ஜோடி.

சாப்ளின் லாலியாக வரும் ஜெயராம் தோற்றத்திலும் உடல்மொழியிலும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். எடுபடவில்லை. அந்தமானில் உள்ள தீவு ஒன்றை ஆட்சி செய்யும் ராஜவேல் மிராசுவின் மகன் மைக்கேல் மிராசு ஆடும் ‘கிளாடியேட்டர்’ பாணி ஆட்டமும் அங்கே உழைக்கும் மக்களுக்கு நேரும் கொடுமைகளும் அதிர்ச்சி தருபவை.

சூர்யாவுக்காக அமைக்கப்பட்ட சண்டை காட்சிகளில் அசரடித்திருக்கிறார் ஸ்டன்ட் இயக்குநர் கிச்சா கெம்பாடீ. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, கலை இயக்குநர்கள் ஜேக்கி - மாயபாண்டி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படத்தின் வலதுகரமாகவே நின்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒரு கற்பனையான கதைக்கு 90-களின் காலகட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், முதல் பாதியில் தோய்ந்து விழும் பல இடங்களைச் சரிசெய்யத் தவறிவிட்டார். முதல் பாதிவரை அப்படி இப்படி நெளிந்து அமர்ந்தாலும் இரண்டாம் பாதி திரைக்கதை யாருக்கும் கனெக்ட் ஆகாத களத்தில், சறுக்கிவிடுகிறது.

பிரிட்டிஷ் காலத்து அடிமை முறை, மிராசு குடும்பம் என இஷ்டத்துக்குச் செல்லும் திரைக்கதை, கதையோடு ஒன்ற விடாமல் தடுக்கிறது. முதல் பாதியில் இருந்த எமோஷனல் காட்சிகள் போல, இரண்டாம் பாதியிலும் கவனம் செலுத்தி இருந்தால் சிறந்த படமாக மாறியிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x