Published : 03 May 2025 12:40 PM
Last Updated : 03 May 2025 12:40 PM
இயக்குநர் மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுப்பது ஏன் என்று நடிகர் சிம்பு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதர இயக்குநர்களின் படங்களுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்று சொல்வார்கள். இந்தப் பேச்சுகளுக்கு பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் சிம்பு.
அதில் சிம்பு பேசும்போது, “மணி சார் படம் என்றால் சரியாக போய்விடுகிறீர்கள், அவர் மீது பயமா, அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர் மீது பயமெல்லாம் இல்லை. எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். அவருடைய படப்பிடிப்புக்கு ஒரு நாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. சில நாட்கள் அவருக்கும் முன்பே சென்றிருக்கிறேன்.
அதற்குக் காரணம் என்னவென்றால், நான் ஒரு நடிகன். ஒரு தயாரிப்பாளர், இயக்குநரை நம்பி நடிக்கப் போகிறோம் என்றால், சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும். இயக்குநர் சரியான நேரத்துக்கு வந்தால் மட்டுமே நடிகர்கள் சரியான நேரத்துக்கு வருவார்கள். ஒரு கதையைச் சொல்கிறோம் என்றால், படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவுடன் இதை இப்படி எடுக்கலாமா, இப்படி பண்ணிரலாமா என்றெல்லாம் செய்ய மாட்டார். அவருக்கு என்ன தேவையோ அதில் தெளிவாக இருப்பார்.
மணி சார் சொன்ன நேரத்தில் படத்தை முடித்துவிடுவார். நடிகர்களின் நேரத்தை வீணடிக்கமாட்டார். அவர் சொன்ன தேதியில் படம் வெளியாகிவிடும், சம்பளம் சரியாக வந்துவிடும். இவ்வளவும் இத்தனை ஆண்டுகளாக சரியாக பின்பற்றும் போது எந்த நடிகர் சரியாக வராமல் இருப்பார்.
அதே போல் ஒரு நடிகரிடம் நடிப்பை மாற்ற வேண்டும் என்றால், உட்கார்ந்த இடத்தில் இருந்தே சொல்ல மாட்டார். அந்த நடிகர் நிற்கும் இடத்துக்கு வந்து எப்படி வேண்டும் என்று சொல்வார். மணி சார் மாதிரியான இயக்குநர் கிடைத்திருந்தால் என் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். ஏனென்றால் நிறைய படங்கள் வந்திருக்கும். ஆனால், நான் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்று குறை சொல்வார்கள். எனக்கு சினிமாவை தவிர என்ன தெரியும். படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து என்ன செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT