ரெட்ரோ எப்படி? - கதைத் தேர்வில் சறுக்குகிறாரா சூர்யா?

ரெட்ரோ எப்படி? - கதைத் தேர்வில் சறுக்குகிறாரா சூர்யா?
Updated on
2 min read

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் நேற்று (மே 1) வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே ‘கனிமா’ பாடல் தாறுமாறான வைரல், அல்போன்ஸ் புத்திரனின் ‘வித்தியாசமான’ எடிட்டிங்கில் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு, சூர்யாவின் கெட்-அப் என பல பாசிட்டிவ் அம்சங்களுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இப்படம் வெளியான முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் சூர்யா ரசிகர்களையும் கூட திருப்திபடுத்தவில்லை என்பதை ஆடியன்ஸ் விமர்சனம் + சமூக வலைதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ’கங்குவா’ படத்தோடு ஒப்பிட்டு, அதற்கு இது பரவாயில்லை என்று சொல்லும் பல விமர்சனங்களை பார்க்க முடிகிறதே தவிர, ஒட்டுமொத்தமாக படத்தை பாராட்டுபவர்கள் குறைவாகவே தென்படுகின்றனர்.

ஒருகாலத்தில் விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளி தொடர் ஹிட் படங்களை கொடுத்து ‘டயர் 1’ நடிகராக இருந்த சூர்யா இன்று அடுத்தடுத்து கதைத் தேர்வில் சொதப்புவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ’சூரரைப் போற்று’, ஜெய்பீம்’ இரு படங்களும் பெரும் வரவேற்பை பெற்றவை என்றாலும் அவை இரண்டுமே கரோனாவால் நேரடியாக ஓடிடியில் வெளியானவை. அதன் பிறகு ஒரு தரமான திரையரங்க வெற்றிக்கு காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு என்னவோ அது இப்போதும் கிட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமான சூர்யா, அதன் பிறகு ‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் வரையிலுமே கிட்டத்தட்ட ஒரே பாணியில்தான் நடித்து வந்தார். ஆனால் பாலாவின் ‘நந்தா’ படத்துக்குப் பிறகு அவரது ரூட் ஒட்டுமொத்தமாக மாறியது. நடிப்பிலும் ஒரு மிகப் பெரிய முன்னேற்றம் தெரிந்தது. ’மவுனம் பேசியதே’, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’,’கஜினி’, ‘அயன்’, ‘ஆதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ என அதன் பிறகு அவர் எங்குமே நிற்கவில்லை.

மிகச் சரியான கதைத் தேர்வு, தன்னுடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் இயக்குநர்கள் என கரியரில் உச்சம் தொட்ட சூர்யாவுக்கு என மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. ஆனால், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘என்ஜிகே’, ‘காப்பான்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ என அடுத்தடுத்து சொதப்பலான திரைக்கதை கொண்ட படங்களின் வரிசையில் தற்போது ‘ரெட்ரோ’வும் சேர்ந்துள்ளது.

சொல்லப் போனால் மேலே குறிப்பிட்ட பெரும்பாலான படங்களில் ஒரு நடிகராக சூர்யா தனது உழைப்பை முழுமையாக கொட்டியிருந்தார். ‘ரெட்ரோ’வில் ஒருபடி மேலே போய் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வழக்கமான மேனரிசங்கள் எதுவும் இல்லாமல் மிக இயல்பான நடிப்பை வழங்கியிருந்தார். உதாரணமாக, சிறுவயது முதல் சிரிப்பே வராத ஒருவன் கண்ணாடியை பார்த்து சிரிக்க முயற்சி செய்யும் இடத்தில் சூர்யாவின் அசாத்திய நடிப்புத் திறமையை உணர முடியும்.

ஆனால், விழலுக்கு இறைத்த நீராக ஒரு சீரான திரைக்கதை படத்தில் இல்லாத காரணத்தால் அவை எதுவும் ஆடியன்ஸ் மத்தியில் எடுபட்டதாக தெரியவில்லை. ‘கங்குவா’ படம் வெளியான முதல் நாளிலேயே அதீத இரைச்சல், மோசமான திரைக்கதை, ஓவர்டோஸ் நடிப்பு என கடும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. படம் வெளியான ஓரிரு தினங்களில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் பற்றி வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து மனம் நொந்து பதிவிடும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. இப்படியான சூழலில் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் சூர்யா.

முதல் பாதி குறை எதுவும் இல்லாத வகையில் சுவாரஸ்யமாக நகர்ந்த ‘ரெட்ரோ’ திரைக்கதை, அப்படியே இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறி ஒட்டுமொத்த படத்தையும் கீழே கொண்டு போய் விடுகிறது. இது சூர்யாவுக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிகிறது. வாசிக்க > ரெட்ரோ: விமர்சனம் - ‘சம்பவம்’ செய்ததா சூர்யா + கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?

இது இப்படியென்றால் ‘ஜெய் பீம்’ படம் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் சூர்யா மீது அளவுக்கு அதிகமாக தூவப்படும் வன்மம் இன்னொருபுறம். படத்தை பார்க்காமலோ, அல்லது படம் வருவதற்கு முன்பாகவோ படம் குறித்த எதிர்மறை கமென்டுகள், மோசமான ஹேஷ்டேகுகள் போன்ற விஷயங்களை வேண்டுமென்றே பரப்புவதும் நடக்கிறது. படத்தையோ அதன் குறைகளையோ விமர்சிக்காமல் சூர்யாவை உருவகேலி செய்வதும், அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதும் மிகவும் அவமானகரமான செயல். இந்த போக்கு சமீபகாலமாக சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

சூர்யாவுக்கு அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, லோகேஷ் கனகராஜின் ‘ரோலக்ஸ்’, ‘இரும்புக்கை மாயாவி’ உள்ளிட்ட படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எனினும் மேலே சொல்லப்பட்ட உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்க சூர்யாவுக்கு தேவை ஒரு குறிப்பிடத்தக்க கம்பேக் மட்டுமே. அதற்கு ஏற்ப நல்ல கதையம்சம் கொண்ட படங்களை சூர்யா தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவரது ’அன்பான’ ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in