170 கிலோ எடை கொண்ட வீரர் நடிக்கும் ‘சுமோ’

170 கிலோ எடை கொண்ட வீரர் நடிக்கும் ‘சுமோ’

Published on

நடிகர் சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘சுமோ’. ஹோசிமின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சதீஷ், விடிவி கணேஷ், யோகிபாபு, ஜப்பானைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். வரும் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி யோஷினோரி தஷிரோ கூறியதாவது: நான் 170 கிலோ எடை கொண்டவன். இந்தியாவில் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் முதல் சினிமா இது. குழந்தைகளை மையப்படுத்தி அவர்களுக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலும் தமிழ்நாட்டிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வியந்தேன்.

அதைத் தள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சென்னையில் இட்லி, தோசை எனக்கும் பிடித்த உணவுகள். எப்போதும் பட்டர் சிக்கன் எனக்குப் பிடிக்கும். இந்தப் படம் தொடங்கியதும் ஜப்பானில் உள்ள சிவன் கோயிலில் ஆசிபெற்றேன். தமிழில் எனக்கு ‘காதல் கசக்குதய்யா’ பாடல் அதிகம் பிடிக்கும். அதைக் கேட்டுக்கேட்டே நானும் பாடத் தொடங்கிவிட்டேன். எட்டு முறை இந்தியா வந்திருக்கிறேன். சென்னை எனக்குப் பிடிக்கும். கோவளத்தில் வசிக்க ஆசை இருக்கிறது. இவ்வாறு யோஷினோரி தஷிரோ கூறினார்.

அவர் தனக்குப் பரிசாகக் கேட்ட கணபதி மற்றும் சிவன் சிலையை இயக்குநர் ஹோசிமின், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை பிரியா ஆனந்த், இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பரிசாக அளித்தனர். நடிகர் சிவா கூறும்போது, “இது குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரியான கதை. டோக்கியோவில் இருந்து சென்னை வரும் ஒரு சுமோ வீரர், சிவாவைச் சந்திக்கிறார். இருவருக்கும் அன்பால் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படம். படப்பிடிப்பில் யோஷினோரி தஷிரோவுடன் எங்களுக்குக் கிடைத்த அனுபவம் புதுமையானது. அவர் பெரிய உருவம் கொண்டவர் என்றாலும் நமது ஊரின் ‘ஈ’-க்குப் பயப்படுகிறார்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in