

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 10-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ வெளியாக இருப்பதால் அன்றைய தினத்தில் ‘இட்லி கடை’ வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக ‘இட்லி கடை’ ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. தற்போது புதிதாக தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக விசாரித்த போது, இதில் உண்மையில்லை. அப்படியொரு பேச்சுவார்த்தை கூட தொடங்கவில்லை என்று தெரிவித்தார்கள். ‘இட்லி கடை’ தள்ளிவைக்கப்பட இருப்பதால் இப்படியொரு தகவல் வெளியாகி இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள். தற்போதைய சூழலில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை தமிழகத்தில் அனைத்து முக்கியமான திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார். இந்த இரண்டு படப் பணிகளை முடித்துவிட்டு ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.