Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM

கல்லை சிவலிங்கமாக மாற்றியவர்

சமூக அளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகில் செம்பழந்தி என்ற கிராமத்தில் வசித்து வந்த ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மாடன் ஆசான் – குட்டியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தை யாகப் பிறந்தவர் இவர். 1854, ஆகஸ்ட் 20-ம் தேதி (கேரளக் கொல்லம் ஆண்டு 1030, சிங்ங மாதம் – தமிழ் மாதம் ஆவணி) சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் நாராயண குரு.

ஆன்மிக ஈடுபாடு

இவர் தனது தொடக்கக் கல்வியை முடித்த பின்பு, திருவனந்தபுரம் அருகில் வாரணப்பள்ளி எனும் ஊரில், குன்னம் பள்ளிராமன் பிள்ளை என்பவரிடம் சமஸ்கிருத மொழியில் காப்பியம், சாத்திரம், தர்க்கம் மற்றும் இலக்கணம் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றார்.

இங்கு இவர் பயிற்சி பெற்று வந்த காலத்தில், திருவனந்தபுரத்தில் இருந்த தமிழர் ஒருவரின் பழைய புத்தகக் கடைக்குச் சென்று வருவார். அவர் மூலம் இவருக்குத் தமிழ் மொழியிலும் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அந்தப் புத்தகக்கடையில் இருந்த தமிழில் வெளியான சித்தாந்தங்கள், புராணங்கள், இதிகாசங்கள், திருக்குறள், திருமந்திரம், திருப்புகழ், திருப்பாவை, சிவபுராணம் போன்ற நூல்களையும் ஆழ்ந்து படித்தார்.

கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் மருத்துவாமலை பகுதியில், மலையின் உச்சியில் பிள்ளைத்தடம் எனும் குகையில் தன் தவத்தைத் தொடங்கினார். இங்கு தன் தவத்தின் வழியில் சில உண்மைகளைக் கண்டறிந்தார்.

ஆத்ம தரிசனம்

“மனிதன் அழிவிற்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்துபவர்களுக்கு மனித வாழ்வில் தூய்மை கிடைக்கும். அதைத் தொடர்ந்து அமைதி கிடைக்கும். குற்றங்களில்லாத மனதைப் பெற்றால் அமைதியான வாழ்க்கையைப் பெறமுடியும் என்பதை உணர்ந்தார். பிள்ளைத்தடம் குகையில் தன் தவத்தால் அற்புதப் பேரொளியைப் பெற்று மகானாக உயர்ந்தார்.

கடவுளின் படைப்பில் உயர்வு, தாழ்வு என்று எதுவுமில்லை. மக்களிடையே தன்னம்பிக்கை உருவாகுமானால் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வாய்ப்புண்டு. மூடப்பழக்க வழக்கங்கள் முன்னேற்றத் திற்குத் தடைகளாக இருக்கின்றன.

மூடப்பழக்கங்களை விட்டுவிடுங்கள். முன்னேற்றத்திற்குக் கல்வி கற்று, அறிவைப் பெறுங்கள். தொழில்களைத் தொடங்குங்கள். உங்கள் முன்னேற்றமே ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் என்று” புதிய கருத்தை மக்களிடையே வலியுறுத்தினார்.

ஆற்றிலிருந்து சிவலிங்கம் போன்ற வடிவிலான கல்லை எடுத்து அதையே சிவலிங்கமாக வைத்தார். கோயில் கட்டிய பிறகு, நல்ல நாள் பார்த்து, சில சடங்குகளைச் செய்து அதன் பிறகுதான் சிலையைக் கோயில் உள்ளே வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.

அதன் பிறகுதான் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிப்பார்கள். ஆனால், ஸ்ரீ நாராயணகுருவோ தான் கொண்டுவந்த கல்லைச் சிவலிங்கமாக வைத்து எவ்வித சடங்குகளும் செய்யாமல் அந்தக் கல்லில்,

“சாதி பேத மதத்துவேசம்

ஏதுமின்றி அனைவரும்

சகோதரர்களாக வாழுகின்ற

வழிகாட்டி இடம் இது”

என்று பச்சிலைகளால் எழுதி அந்தக் கல்லை வழிபாட்டுக்குரியதாகக் கொண்டு அருவிப்புரத்தில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார்.

சமூகப் போராளி

அவர் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து மக்களின் பிரச்சனைகளை அறிந்தார். அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முனைந்தார். 1904-ம் ஆண்டு வர்க்கலை அருகிலுள்ள சிவகிரி எனுமிடத்துக்கு வந்தார்.

அங்கிருந்த அமைதியான சூழ்நிலை அவருக்குப் பிடித்துப் போனதால் அங்கேயே தங்கிவிட்டார். அவருடைய சீடர்கள் அங்கு அவருக்கு ஆசிரமம் அமைத்தனர். சிவகிரி ஆசிரமத்தில் அவரது நற்போதனைகளைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஸ்ரீ நாராயணகுருவின் மனிதநேய அடிப்படையிலான கொள்கைகள் இலங்கையிலும் பரவின. அங்கேயும், அவருக்கு பக்தர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,  நாராயணகுரு சில சீடர்களுடன் இலங்கைக்குச் சென்றார். அங்கு ‘விஞ்ஞானோதயம்’ எனும் பெயரில் ஒரு சபையை நிறுவினார்.

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளால் பலருக்கும் மன அழுத்தம் உண்டாகிறது. இந்த மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும், மன அமைதி ஏற்படவும் ஆன்மிக வழியே சிறந்ததாக இருக்கிறது. கேரளத்தில் ஜாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும் ஆன்மிக வழியில் பல கோயில்களைக் கட்டுவதென அவர் முடிவு செய்தார்.

இந்தக் கோயில்கள் சிறிதாக இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும். மன அமைதிக்கு வேண்டிய அழகிய, அமைதியான சுற்றுப்புறச் சூழல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். கோயிலுக்கு அருகில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்பது போன்ற புதிய வழியிலான நெறிகளைக் கொண்டுவந்தார்.

நம்பிக்கைகளே முக்கியம்

வழிபாட்டிற்குச் சிலைகள் முக்கியமில்லை. நம்பிக்கைகளே முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக, முருக்கம்புழா எனுமிடத்தில் கட்டப்பட்ட கோயிலில் சிலைகள் எதுவும் அமைக்கவில்லை. சத்தியம், தர்மம், தயா என எழுதி வைத்து அந்தச் சொற்களை வழிபடும்படி செய்தார்.

கல்வியால் மட்டுமே ஏற்றத்தாழ்வு களை நீக்க முடியும். கல்வியே ஒவ்வொருவரையும் தனக்கென்று ஒரு பகுத்தறிவுப் பாதையில் சிந்திக்க வைக்கும் என்று நினைத்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு, அந்தப் பள்ளிக்கூடங்களில் அனைத்துச் சாதியினருக்கும் இடமளிக்கப்பட்டது.

மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அதற்கு அடிமையாகித் தங்கள் உழைப்பால் கிடைக்கும் பொருளை இழக்கவும் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

கல்வியே விடுதலை

கேரளாவில் சாதியக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டிருந்த மக்களை முன்னேற்றமடையச் செய்வதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பின் மூலம் சமபந்தி போஜனம், சாதியின்மை பற்றி விளம்பரம் செய்தல், கலப்புத் திருமணம் போன்ற பல்வேறு சமூக சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்தினார். இத்திட்டங்களுக்கு எதிர்ப்புகள் கடுமையாக இருந்தன. எதிர்ப்புகளைத் தனது அறவழிப் போராட்டம் மூலம் வெற்றி கண்டார்.

தனி மனித ஒழுக்கமும், வாழ்க்கை முறையும்தான் ஒரு சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த அவர், மதுப் பழக்கத்தை அடியோடு விட்டுவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

“ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள் – மனிதருக்கு” எனும் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன் தன் சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழியாக நடைமுறைப்படுத்தியும் வந்தார்.

தனி மனித முன்னேற்றத்திற்குக் கல்வியும், வறுமையைப் போக்கத் தொழிலையும் முன்னிலைப்படுத்திய இந்த மகான் 1928, செப்டம்பர் 20-ம் தேதியன்று மாலை 3.30 மணிக்கு மகாசமாதி அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x