

“நானும், இயக்குநர் சுந்தர்.சி-யும் ‘மதகஜராஜா’ படம் வெளியாக வேண்டும் என பல ஆண்டுகள் பேசியிருக்கிறோம். இப்போது அது நிஜம் ஆகியிருக்கிறது” என்று நடிகர் விஷால் உருக்கமாக சில தகவல்களைப் பகிர்ந்தார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம்தான் ‘மதகஜராஜா’. இப்படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் பல பிரச்சினைகளில் சிக்கியதால் ரிலீஸில் முடக்கம் நீடித்தது. பல தடைகளைக் கடந்து, 12 ஆண்டுகள் கழித்து இப்படம் ஜனவரி 10-ல் வெளியானது.
ப்ரோமோஷன்களுக்கான செலவினம் உள்பட ரூ.15 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான ‘மதகஜராஜா’ படம் வெளியான முதல் 6 நாட்களில் மட்டும் ரூ.30 கோடி அளவில் வசூலை எட்டி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
இந்த நிலையில், ‘மதகஜராஜா’ சக்சஸ் மீட்டில் நடிகர் விஷால் உருக்கமாக பேசும்போது, “என்னை இப்படி பார்த்ததே இல்லை; என்ன ஆச்சு விஷாலுக்கு’ என்று நிறைய பேர் எனக்காக கண்ணீர் விட்டு அழுதனர். என் உடல்நிலை குறித்து பலரும் நலம் விசாரித்தனர். பூ விற்கும் அம்மா, தூய்மைப் பணிபுரியும் அம்மா என நிறைய அன்புள்ளங்கள், ‘நான் நன்றாக இருக்க வேண்டும்’ என்று உண்மையாக நலம் விசாரித்தனர்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவ்வளவு உடல் நல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நான் அன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு வருவதற்கு இயக்குநர் சுந்தர்.சி மட்டும்தான் காரணம். நானும் அவரும் ‘மதகஜராஜா’ படம் வெளியாக வேண்டும் என பல ஆண்டுகள் பேசியிருக்கிறோம். இப்போது அது நிஜம் ஆகியிருக்கிறது. இவ்வளவு நாளுக்குப் பிறகு இப்படம் வெளியானபோதும் தியேட்டரில் ரசிகர்கள் குவிந்தார்கள்.
இதெல்லாம் இறைவனின் அருள்தான். மனோ பிரசாத் போன்ற தயாரிப்பாளர்கள் திரும்பவும் வந்து நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இப்போது இருக்கும் பல தயாரிப்பாளர்கள் சரியாக வரிகள் செலுத்துவதில்லை, சரியான சம்பளம் கொடுப்பதும் இல்லை. நல்ல தயாரிப்பாளர்களே நம் திரைத்துறைக்கு வேண்டும். நிறைய நல்ல இயக்குநர்களை வைத்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும்” என்று பேசினார்.
முழுக்க முழுக்க சுந்தர்.சி பாணி காமெடியில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ படத்துக்கு மென்மேலும் வரவேற்பு கிடைப்பதால், இன்னும் சில நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டிவிடும் என்று திரை வர்த்தக நிபுணர்கள் கணித்திருப்பது கவனிக்கத்தக்கது.