தெலுங்கு இயக்குநர் மீது நடிகை பூனம் கவுர் புகார்

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
Updated on
1 min read

தமிழில், நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், “பிரபல இயக்குநரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது” என்று குறிப்பிட்டிருந்தார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்ட நாட்களுக்கு முன், தெலுங்கு நடிகர் சங்கத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்த விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

என் வாழ்க்கையை நாசமாக்கி என் மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் கெடுத்த அவரை முன்னணி திரைத்துறையினர் ஆதரித்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் சங்க பொருளாளர் சிவபாலாஜி கூறும்போது, ‘‘அவரிடம் இருந்து சங்கத்துக்கு எந்த புகாரும் வரவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in