நடிகர் ஷக்தி கபூரை கடத்தி பணம் பறிக்க திட்டம்!

நடிகர் ஷக்தி கபூரை கடத்தி பணம் பறிக்க திட்டம்!
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் முஷ்டாக் கான். இவரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு அழைத்திருந்தனர். அதற்காக ராகுல் சைனி என்பவர் அக்.15-ம் தேதி, ரூ.25 ஆயிரம் முன்பணம் மற்றும் விமான டிக்கெட்டை முஷ்டாக் கானுக்கு அனுப்பினார். இதையடுத்து நவ.20-ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி வந்த அவரை, விமான நிலையத்திலிருந்து காரில் மீரட்டுக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி புறநகர் பகுதி சென்றதும் அவரை வலுக்கட்டாயமாக வேறொரு காருக்கு மாற்றினர். ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கட்டி வைத்தனர். பின் அவரது வங்கி கணக்கின் பாஸ்வேர்டை மிரட்டிப் பெற்று ரூ.2.2 லட்சத்தை பறித்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய நடிகர் முஷ்டாக் கான், பிஜ்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீஸார் கடத்தல் கும்பலை சேர்ந்த சர்தக் சவுத்ரி, சைபுதீன், அசிம், ஷஷாங்க் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இதுபற்றி பிஜ்னோர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ஜா கூறும்போது, “இந்த கும்பல் நடிகர் ஷக்தி கபூரையும் கடத்த சதித்திட்டம் தீட்டினர். அவரையும் இதேபோல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருமாறு அழைத்துள்ளனர். அவர் முன்பணமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். அதை இந்த கடத்தல் கும்பலால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால் அவர் தப்பினார். வேறு யாரையும் இப்படி ஏமாற்றினார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.

இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குமுன் இந்தி நடிகர் சுனில் பால் என்பவரும் கடத்தப்பட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in