Last Updated : 31 Jul, 2018 12:00 PM

 

Published : 31 Jul 2018 12:00 PM
Last Updated : 31 Jul 2018 12:00 PM

வலுக்கும் எழுத்தாளர்கள் சங்க மோதல்: விசு பேச்சுக்குப் பாக்யராஜ் காட்டமான கடிதம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க மோதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விசுவின் பேச்சுக்கு இயக்குநர் பாக்யராஜ் காட்டமான கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க விவகாரம் தொடர்பாக, ஜூலை 23-ம் தேதி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் விசு மீது இயக்குநர் பாக்யராஜ் புகார் அளித்தார். இதில் பிறைசூடன், விசு மற்றும் சுந்தர்ராமன் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

அமெரிக்காவிலிருக்கும் விசு ‘பாக்யராஜ், உங்கள் மனிதாபிமானம் செத்துவிட்டதா?’ என்று கடுமையான பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகக் கே.பாக்யராஜ் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில், சங்கத்தின் நலன் பொருட்டும், சங்க உறுப்பினர்களின் ஒருமித்தக் கருத்துக்குத் தலை வணங்கவேண்டிய கடமையின் பொருட்டும், கமிஷனரிடம் பிறைசூடன், விசு, மதுமிதா ஆகியோர் மீது ஒரு புகார் அளித்தேன்.

அதற்கு விசு, பிறைசூடன் ஆகியோர் செல்போனில் குரல்பதிவு, மற்றும் பத்திரிகைகளில் அறிக்கை என, என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். விசுவின் உடல் நலம் கருதிப் பதில் தர நான் மெளனம் சாதித்தேன். ஆனால் உங்கள் மெளனத்தால், அவர்கள் குற்றச்சாட்டு உண்மை என்று ஆகிவிடக்கூடும் எனப் பலரும், அறிவுறுத்தியதால் எனது தன்னிலை விளக்கமாக இந்தப் பதிலைப் பதிவு செய்கிறேன்.

மரியாதைக்குரிய விசு அவர்களே! உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் நான் உட்படத் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் உங்கள் மீது ஆழ்ந்த அனுதாபத்தில் உள்ளோம் இது உண்மை. ஆனால் அந்த அனுதாபத்தை, ஆதாயமாக மாற்ற நீங்கள் முயற்சிப்பது, உங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கு அழகல்ல என்பதை மிக மிக வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். படிப்போர்க்கு இடியாக இந்த வார்த்தை இறங்கும். ஆனால், என்ன செயவது. உள்ளதைச் சொல்ல வேண்டியது உள்ளதே!

”பாக்யராஜ்! உங்கள் மனிதாபிமானம் செத்துவிட்டதா?” என்று என்னைப் பார்த்து நீங்கள் கேள்வி எழுப்பினாலும், நான் உங்கள் மனசாட்சி இன்னும் உயிரோடிருப்பதாகக் கருதி, உங்களுக்குச் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

நீங்கள் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போன தேதி 22.7.2018. ஆனால் நான் உங்களுக்கு 16.7.2018-லேயே எனது லெட்டர் பேட்டில், டை கூட அடிக்காமல் கைப்பட ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு மறுநாளே நீங்கள் வாட்ஸ்-அப்பில் பதில் அனுப்பியிருந்தீர்கள். அந்த விஷயத்துக்குப் பிறகு வருகிறேன். முதலில் நான் எழுதிய கடிதத்திற்கு வருவோம்.

* பிறைசூடன் சங்கத்தின் பணத்தை ஒப்படைக்கலாம் அல்லது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டும் இயங்கலாம். இது தான் சங்கத்தினரின் விண்ணப்பமோ, விவாதமோ தவிர அவர் கையாடல் செய்தது என்பது குற்றச்சாட்டல்ல.

* பிறைசூடன் மீதே கையாடல் குற்றச்சாட்டு வைக்காத நிலையில், ‘விசு கையாடல் செய்தார்’ என யார் எங்குப் பதிவு செய்து, நீங்கள் பரபரப்பாக அறிக்கை அனுப்பினீர்கள்? என்ற கேள்வியை அன்றே எழுப்பியுள்ளேன்.

* இப்போது வந்த தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் அங்கம் வசிக்க இயலாத நிலையில் எங்கள் டிரஸ்ட் விதி அமைக்கப்பட்டுள்ளது என்பது பிறைசூடன் பதில்

* ஆனால் தாங்கள், “தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கும் டிரஸ்ட்டில் இடம் உண்டு என்று சொல்லிப் பார்த்தோம். நரிக்கூட்டம் மசியவில்லை என்று இப்போது பதிவு செய்ததை முன்னால் யாரிடம் எப்போது பதிவு செய்தீர்கள்? இணையத்தான் சம்மதம் கேட்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.

* ‘உடல் நலமில்லை - விலகத்தயார். டிரஸ்ட்டை அப்போதே எடுத்துக் கொள்ளச் சொன்னனே’ என்ற உங்கள் கடிதப்பதிவு வார்த்தைகளை நம்பியதால் தானே, நான் பிறைசூடனிடம் பேசினேன். இல்லையென்றால் உங்களிடமே பேசியிருப்பேனே? நீங்கள் இந்த விஷயத்தில் ஏன் பிறைசூடனுக்கு பின்புலமாக இருந்துவிட்டு, இப்போது உடல் நலக்குறையையும் மீறி இவ்வளவு ஆவேசப்படுகிறீர்கள்?

* வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு நீங்கள் அனுப்பிய குரல் பதிவைக் கேட்டேன். உங்கள் மீது இப்போது நான் கொண்டுள்ள ஒரே மனக்குறை. நீங்கள் வெளிப்படையாக ட்ரஸ்ட்மேட்டரில் பேசியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? என்பதே!

* முன்னாள் இன்னாள் தலைவர்கள் நாம் இருவரும் மல்லாந்து படுத்துக் கொண்டுள்ள நிலையில் உள்ளோம். பரவாயில்லை என நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என நம்பி, இதனை எழுதுகிறேன். இனி உங்கள் விருப்பம்.

உங்களுடைய கோபம் சிலர்மேல் உள்ளது நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனால், நலிந்தோர்களுக்காக உதவ, அரட்டை அரங்க விசுவாக, சொந்த ட்ரஸ்ட் வைத்துள்ள கருணை விசுவாக, இறங்கி வாருங்கள். நான் உங்கள் வீடு தேடி வருகிறேன். ஊர் வாய்க்கு அவுல் போடாமல் இன்முகத்துடன் இணைந்து செயல்படுவோம். எழுத்து பதில் எதிர்பார்க்காமல் உங்கள் அழைப்பு மணிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்!

இப்படி எழுதிய எனக்குத் தாங்கள் மறுநாள் அனுப்பிய வாட்ஸ்-அ- பதிவில்

திரு. பாக்யராஜ் அவர்களுக்கு வணக்கம்... (தேவையானதை மட்டும் குறிப்பிடுகிறேன்)

சுந்தர்ராமன், பிறைசூடன் பக்கம் நியாயம் இல்லை என்றே நீங்கள் நினைத்தாலும் ஒரு கர்ணனாக இருந்து வாழத்தான் என நான் விரும்புகிறேன். இந்த வாட்ஸ்-அப் மெசேஜ் என்னுடன் பேச அழைத்த உங்கள் அழைப்பை, மறுக்க மட்டுமே தவிர, நீங்கள் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட என்று சுந்தரராமன், பிறைசூடனுக்கு பரிவாக மட்டுமே பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தீர்களே தவிர,

“எனக்கு உடல் நலக்குறைவு என்று கூறிய நீங்கள் ஏன் பிறைசூடன் பின்னாலிருந்து இயங்கினீர்கள்?” என்பதற்குப் பதில் அளிக்கவில்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய எங்களிடம் அறக்கட்டளையை ஒப்படைப்பதாக எப்போது எங்கே கூறினீர்கள் என்பதற்குப் பதில் இல்லை.

நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு வெளிநாட்டு கலை நிகழ்ச்சியை, நீங்களாகக் கற்பனையில் அரங்கேற்றி அதில் டிரஸ்ட் பணம் பறி போய்விடக்கூடாது என்ற பொறுப்புடன் பாதுகாப்பதற்காகவே, தர மறுத்ததாகக் கூறியது எவ்வளவு பெரிய கபட நாடகம்? ஏங்க... ஏங்க விசு.. எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருந்தது.

நான் முன்னால் சொன்னதெல்லாம் நீங்கள் இங்கே இருக்கும் போது நமக்குள் நடந்த நிகழ்வுகள் தானே? அதன்பின் ஆறாவது நாள்தானே அமெரிக்கா புறப்பட்டுப் போனீர்கள்!

ஏதோ நீங்கள் இல்லாத போது ஏதேதோ நடந்தத்தாகக் கூறி, “பாக்யராஜ்! மனிதாபிமானம் செத்துவிட்டதா என்று கேட்க, உயிரோடிருக்கும் உங்கள் மனசாட்சிக்கு எப்படி மனது வந்தது”

நான் “ நியாயம், தர்மம், நேர்மையில் இம்மியளவும் பிறழாதவன், சங்கத்திற்காக ஒரு லட்சம் உதவியவன் என்பதைத் தங்களது ஒவ்வொரு கடிதத்திலும் தவறாமல் குறிப்பிடும் பண்பாளரான, நீங்கள் கடந்த இரண்டாண்டுகளாக நலிந்தோர்க்கு உதவும், நிதித் தொகையை நிறுத்தி வைத்திருந்துவிட்டு, இப்போது நம்மிடையே பிரச்சினை வந்த பிறகு அவசரமாக, எங்கள் மீது குறை கூறிய ஒரு கடிதத்துடன், நீங்கள் சுந்தரராமனும், சொந்தக் கைக்காசிலிருந்து உதவுவதாகக் கூறி இரண்டாயிரம் அனுப்பிவைத்தீர்கள். இது அப்பட்டமான திட்டமிடல் இல்லையா? இந்த வானளாவிய தங்கள் கருணை உள்ளத்துக்கு நாங்கள் கை கூப்பி நமஸ்கரிக்க வேண்டுமா?

நாம் இருவருமே மல்லாந்து படுத்துள்ள நிலையில் உள்ளோம் என்று நான் எச்சரித்தும் துப்பிவிட்டீர்கள். கர்ணை கோடிட்டுக் காட்டித் தாங்கள் கடிதம் எழுதியதால் அதே கர்ணனின் வாழ்க்கை பாடல் வரிகளை நினைவூட்டுகிறேன்.

”(செஞ்சோற்று கடன் தீர்க்க)

சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா

வஞ்சகன் பிறைசூடனடா...”

பொதுவாகக் கவிஞர்கள், ரசனையின் பொருட்டு, கவிதையில் பொய்களைப் புனைவார்கள். ஆனால் பொய்களாலேயே புனையப்பட்ட ஒரு மகா பாக்யசாலி கவிஞர் பிறைசூடன் அவர்கள்!

இல்லையென்றால், முதல் சந்திப்பில் என்னிடம் “நான் கூட டிரஸ்ட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் 4 பேர் யாரென்று கூறுங்கள் நானும் இரண்டு மூன்று பேரைக் கூறுகிறேன். சுமூகமாகப் பேசி முடிவு செய்வோம்” என்று கூறிச் சென்றவர். மறு சந்திப்பில் எடுத்த எடுப்பிலேயே “ஸாரி சார்! இது சரிப்பட்டு வராது.

நீங்கள் கூறும் யாரையும் அவர் ஏற்று கொள்ளத் தயாராய் இல்லை” என்று குண்டைப் போட்டார். ‘யார்’ என்று கேட்க ‘விசு’ என்றார். அவர்தான் உடல் நிலமில்லை நான் விலகுகிறேன் என்று கைப்பட கடிதம் எழுதி, பேசியும் உள்ளாரே என்றேன். ‘சார் அவர்  உங்களிடம் பேசுவது வேறு என்னிடம் பேசுவது வேறு. ஸ்ட்ரிட்டாக யாரையும் ஏற்று கொள்ள முடியாது எனக் கண்டிஷனாகக் கூறிவிடுங்கள் என்று என்னிடம் சொல்லிவிட்டார் என்றார்.

அப்போது பிறைசூடன் போன் ஒலித்தது பாருங்க. ‘விசு’ என்று என்னிடம் காட்டிவிட்டுப் போனில் ‘சாரிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் வெளியே வந்து பேசுகிறேன்’ என்று கூறி ‘பொதுக்குழு கூடட்டும் சார்!’ என்று புறப்பட்டுவிட்டார்.

இப்போது காரில் அமர்ந்து ஒரு பேட்யில், “பாவம் விசு! அவர் ஒரு பாவமும் அறியாதவர் இரண்டு வருடங்களாக எதிலும் கலந்து கொள்ளாதவர். அவரைப் போய் அநியாயமாக இதில் இழுக்கிறார்களே?” என்று நா கூசாமல் நடிக்கிறார். அதோடு ‘இவர் இல்லாவிட்டால் சினிமா உருப்படும்.

அவர் இல்லாவிட்டால் சினிமா உயரும் என்று சாபம் விடுவது போல் பலரையும் பொரிந்து தள்ளுகிறார். நான் ரயில்வே கேட்டுக்கே குனியாதவன் யாருக்குக் குனிவேன் என்று எவ்வளவு வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்.

அவரிடம் உள்ள தமிழ் புலமைக்கு ஏற்ப, திரையுலகில் அவர் பிரகாசிக்கவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இதுவரை இருந்தது. ஆனால் வாக்கு சுத்தம் இல்லாதவரை தமிழன்னை எப்படித் தாலாட்டுவாள்?

நந்தவனத்தில் ஒரு ஆண்டி- அவன்

நாலாறு மாதங்கள்

குயவனை வேண்டிக்

கொண்டுவந்தான் ஒரு தோண்டி

கூத்தாடி கூத்தாடி அதைப்

போட்டுடை தாண்டி”

எல்லாம் வல்ல விசு, இயன்றவரை பிறருக்கு உதவி இதுவரை நற்பெயரெடுத்த விசு, பிறைசூடனுக்காக இப்போது காவடி எடுத்து மொத்தத்தையும் உடைத்து,  இல்லை இல்லை...;

BETTER LATE THAN NEVER இன்னும் தன் அபிப்பிராயங்களை அவர் மாற்றி கொண்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அவகாசமிருக்கிறது. நல்ல நலமுடன் திரும்பி வந்து, நட்பினைத் தொடரப் பிராத்திக்கிறேன்

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x