கவுதம் மேனனின் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ டீசர் எப்படி? - மம்மூட்டியின் காமெடி களம்!
சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துவரும் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ (Dominic and The Ladies purse) மலையாள படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டீசர் எப்படி? - “சார் எதும் பிரச்சினையாகுமா? அவர் கோபப்பட்டு நம்மிடம் வந்தால் என்ன செய்வது?” என மம்மூட்டியிடம் கோகுல் சுரேஷ் கேட்கிறார். “அதிகபட்சமாக அவர் நம் மீது தாக்குதல் நடத்தலாம். அப்படி அவர் செய்தால்” என்று தொடங்கி அவரை எப்படியெல்லாம் திருப்பி அடிக்கலாம் என விவரிக்கிறார் மம்மூட்டி. “அப்படியென்றால் அன்றைக்கு வீட்டுக்கு வந்தவர்களுக்கும் இதே அடி தானா?” என கோகுல் கேட்க, “அவர்களுக்கு அறிவியல்பூர்வமான தாக்குதல்களெல்லாம் தெரியாது. அதுமட்டுமில்லாமல் அது ஒரு சர்ப்ரைஸ் தாக்குதல். இருந்தாலும் சமாளித்துவிட்டேன்” என்கிறார் மம்மூட்டி.
அத்துடன் டீசர் முடிகிறது. வித்தியாசமான டீசர் இரண்டு பேரின் உரையாடல்களுக்குள் சுருங்கிவிடுகிறது. இதன் மூலம் படம் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகிவருவதாக தெரிகிறது. மேலும் படத்தில் மம்மூட்டி துப்பறிவாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வித்தியாசமான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் கதையை துளியும் வெளிப்படுத்தாமல் டீசர் வெளியாகியிருப்பதாகவும், மம்மூட்டியின் துப்பறியும் நகைச்சுவை களத்தை காண ஆவலுடன் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்: கவுதம் வாசுதேவ் மேனன் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ (Dominic and The Ladies purse) படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. டீசர் வீடியோ:
