‘கங்குவா’ எதிரொலி: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ இசையமைப்பாளர் மாற்றம்?

‘கங்குவா’ எதிரொலி: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ இசையமைப்பாளர் மாற்றம்?

Published on

‘கங்குவா’ படத்துக்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனத்தை முன்வைத்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ இசையமைப்பாளர் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தின் பின்னணி இசைக்கு கடும் எதிர்வினைகள் எழுந்தது. குறிப்பாக அதன் ஒலிச் சத்தத்தை முன்வைத்து பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார் தேவி ஸ்ரீபிரசாத். இந்த விமர்சனம் தொடர்பாக அவருடைய தரப்பில் எந்தவொரு விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது ‘கங்குவா’ படத்துக்கு எழுந்த விமர்சனங்களை முன்வைத்து, தேவி ஸ்ரீபிரசாத்தை நீக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவி ஸ்ரீபிரசாத்துக்கு பதிலாக அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருவதால் அனிருத் பணிபுரிய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ‘குட் பேட் அக்லி’ படக்குழுவினர் சார்பில் விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in