இயக்குநர் சுரேஷ் சங்கையா உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு

இயக்குநர் சுரேஷ் சங்கையா உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு

Published on

திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து பிரேம்ஜி நடிப்பில் 'சத்திய சோதனை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் கவனம் பெற்றது. இதையடுத்து யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ‘கெணத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் சுரேஷ் சங்கையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த ஒருமாதமாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மறைந்த சுரேஷ் சங்கையாவுக்கு தன்ஷிகா என்ற மனைவி, இரு குழந்தைகள் உள்ளன. சுரேஷ் சங்கையாவின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகிலுள்ள கரிசல்குளம் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in