

சென்னை: “‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையில் நான் ஒரு பகுதி மட்டுமே. அதில் பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்” என்று தமன் தெரிவித்துள்ளார்.
‘புஷ்பா 2’ படத்துக்கு பின்னணி இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியானது. இதனை தமனும் உறுதிப்படுத்தினார். இதனிடையே ‘தாகு மஹாராஜ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தமன் பேசும் போது, “புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையில் நான் ஒரு பகுதி மட்டுமே. அதில் பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவ்வளவு பெரிய படத்தின் பின்னணி இசையின் முழு பொறுப்பையும் என்னால் ஏற்க முடியவில்லை.
அப்படி ஏற்றுக் கொண்டாலும் பதினைந்து நாட்களில் வேலையை முடிக்க இயலாது. ஆகையால் ஒரு சின்ன பகுதியை மட்டுமே ‘புஷ்பா 2’ படத்தில் செய்ய முடிந்தது. படத்தின் நாயகன் மற்றும் இயக்குநர் என் பணியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எப்போதுமே என் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிப்பேன்” என்று பேசியிருக்கிறார் தமன். இவருடைய பேச்சின் மூலம் ‘புஷ்பா 2’ படத்தில் தமன் மட்டுமே பின்னணி இசையமைப்பாளர் அல்ல என்பது உறுதியாகிவிட்டது.
வேறு யாரெல்லாம் பின்னணி இசையமைத்து வருகிறார்கள் என்பது வரும் நாட்களில் தெரியவரும். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை (நவம்பர் 17) மாலை வெளியாகிறது. இதற்காக பாட்னாவில் பிரம்மாண்ட விழாவுக்கு படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.