Published : 21 Jun 2018 05:31 PM
Last Updated : 21 Jun 2018 05:31 PM

தயாரிப்பாளராக மாறிய ஸ்ருதி ஹாசன்

‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், ‘லக்’ இந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்துவரும் ஸ்ருதி, தற்போது வித்யுத் ஜம்வால் ஜோடியாக ஒரு இந்திப் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன், கமல்ஹாசன் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படமும் அவர் கைவசம் இருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். ‘லென்ஸ்’ படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற இந்தப் படம், ‘லென்ஸ்’ படத்தைப் போலவே குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு எடுக்கப்படுகிறது. தமிழில் இந்தப் படம் எடுக்கப்பட்டாலும், அனைத்து மொழி ரசிகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

“உலகம் முழுவதும் உள்ள தயாரிப்பாளர்கள், தாங்கள் உருவாக்கும் கலைப்படைப்பை முடிந்தவரை உண்மைக்கு அருகில் இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இந்தப் படம் உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாகத் தயாராகவிருக்கிறது.

நான்கு நண்பர்களின் கதை மூலம் இந்த சமூகம் எப்படிப் பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை, தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்வதாக இந்தப் படம் அமைந்துள்ளது. அதாவது, திரைக்கதை, வசனங்கள் இல்லாமல், சிறிய உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக அமைந்துள்ளது” என்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

“எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான, சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது. இந்தப் படம், பல்வேறு ஆக்கபூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன், உலகத்தரத்திலான கதை சொல்லலையும் கொண்டிருக்கிறது. இதன் கதையைக் கேட்டதும், இயக்குநரைப் பாராட்டினோம். அத்துடன், அவரின் முந்தைய படைப்பான ‘லென்ஸ்’ படத்தைப் பார்த்து வியந்தோம்.

எளிய கதைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதில், அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும்போது சவாலைக் கொடுக்கும் என்பதால், அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்” என்கிறார் தயாரிப்பாளர் ஸ்ருதி ஹாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x