

‘புஷ்பா 2’ படத்தின் தமிழக உரிமை வியாபாரத்தின் பின்னணியில் நடந்தது என்ன என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ‘புஷ்பா 2’ படத்தின் உரிமைகள் விற்பனையை தொடங்கி இருக்கிறது படக்குழு. ஓடிடி, தொலைக்காட்சி, இசை உள்ளிட்ட உரிமைகள் முன்பாகவே விற்கப்பட்டுவிட்டன. தமிழக உரிமையினைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால், முன்னதாக படத்தினை விநியோக அடிப்படையில் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.
இந்த விநியோக அடிப்படை வெளியீட்டுக்கு 50 கோடி என நிர்ணயித்துள்ளது ‘புஷ்பா 2’ படக்குழு. மேலும், இரண்டு நிறுவனங்களுமே தெலுங்கில் ‘கோட்’ படத்தை நீங்கள் வெளியிடுங்கள், தமிழில் ‘புஷ்பா 2’ படத்தினை நாங்கள் வெளியிடுகிறோம் என்று பேசியிருக்கிறார்கள். அதை தான் இப்போது நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ‘புஷ்பா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இங்கு 50 கோடி பணத்தை எடுக்க வேண்டுமென்றால் சுமார் 100 கோடி அளவுக்கு வசூல் செய்ய வேண்டும். கண்டிப்பாக செய்துவிடும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், விநியோக அடிப்படையில் தான் வெளியீடு என்பதால் நஷ்டம் ஏற்பட்டாலும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பிரச்சினையில்லை என்பது தான் உண்மை.