

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட்பிரபுவை தொலைபேசி வாயிலாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. இதனை வெங்கட்பிரபு நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார். தமிழகத்தில் மட்டுமே இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது மருத்துவ சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினி.
அவர் ‘தி கோட்’ படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் வெங்கட்பிரபுவை தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டியிருக்கிறார். ரஜினியின் தொலைபேசி அழைப்பு குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தி, ““தொலைபேசியில் அழைத்து எங்கள் ‘தி கோட்’ படத்தை பாராட்டியதற்காக நன்றி தலைவா. மனதார வாழ்த்திய உங்களுக்கு நன்றிகள். அன்பும், நன்றியும்.” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.