

சென்னை: “தமிழக அரசின் சார்பில் கலைத்துறை வித்தகர் விருது பெற்றுள்ள பி. சுசிலாவையும், கவிஞர் மு. மேத்தாவையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்,” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருது திரைப்பட பின்னணி பாடகி பி. சுசிலாவுக்கும், கவிஞர் மு. மேத்தாவுக்கும் ரூபாய் 10 லட்சம் பொற்கிழியுடன் தமிழக அரசு வழங்கியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள பி. சுசிலா திரைப்படங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்களின் அன்பை கொள்ளை கொண்டவர். அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அதேபோல, கவிஞர் மு. மேத்தா மிகச் சிறந்த கவிஞர். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் கலைத்துறை வித்தகர் விருது பெற்றுள்ள பி. சுசிலாவையும், கவிஞர் மு. மேத்தாவையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.