Published : 23 Jun 2018 06:14 PM
Last Updated : 23 Jun 2018 06:14 PM

ரசிகர்களைக் குழப்பும் ‘விசுவாசம்’ மற்றும் ‘சர்கார்’

படத் தலைப்புகளில் சந்தேகம் இருப்பதால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

அஜித்தை வைத்து நான்காவது முறையாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் சிவா. அஜித் - சிவா கூட்டணியின் ‘வி’ சென்டிமென்ட்படி, இந்தப் படத்துக்கு ‘விசுவாசம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்தின் தலைப்பை அறிவிக்கும்போது, ஆங்கிலத்தில் ‘Viswasam’ என்று அறிவித்தனர். எனவே, பெரும்பாலானவர்கள் இந்தப் படத்தை ‘விஸ்வாசம்’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், அதை ‘விசுவாசம்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். இதனால், தமிழில் இந்தப் படத்தை எப்படிக் குறிப்பிடுவது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இத்தனை நாட்கள் ஆகியும் இந்தக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தாமல் மவுனம் காத்து வருகிறது படக்குழு.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது. ‘சர்கார்’ என தமிழிலும், ‘Sarkar’ என ஆங்கிலத்திலும் இதைக் குறித்துள்ளனர். ஆனால், இந்த வார்த்தையை நாம் காலம் காலமாக ‘சர்க்கார்’ என்றே குறிப்பிட்டு வருகிறோம். சமஸ்கிருத மொழியைச் சேர்ந்த இந்த வார்த்தையின் அர்த்தம் ‘அரசு’ என்பதாகும். இந்நிலையில், ‘சர்கார்’ என்று தலைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஒருவேளை வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்று தங்களுக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர்.

தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி ரத்து என தான் முதல்வராக இருக்கும்போது அறிவித்தார் கருணாநிதி. அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் அதில் சில மாற்றங்களுடன் வரிவிலக்கைத் தொடர்ந்தார். ஆனால், நாடு முழுவதும் ஒரே வரி என ஜி.எஸ்.டி.யைக் கொண்டுவந்த பிறகு, இந்த வரிவிலக்கு நீக்கப்பட்டது. எனவே, மறுபடியும் பிறமொழித் தலைப்புகள் அதிகமாகத் தொடங்கிவிட்டன. இதுவும் பாதிப்புதான் என்றாலும், அந்தப் பிறமொழி வார்த்தைகளைக் கூட சரியாக வைக்காமல், தவறாக வைத்து எல்லோரையும் குழப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x