Published : 10 May 2018 09:34 AM
Last Updated : 10 May 2018 09:34 AM

“இன்று தலைவர், நாளை...” - பேச்சில் இடைவெளி விட்ட தனுஷ்; ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்

‘இன்று தலைவர், நாளை...’ என பேசிக் கொண்டிருக்கும்போது தனுஷ் இடைவெளி விட்டதால், ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்தது.

‘காலா’ இசை வெளியீட்டு விழா, நேற்று கோலகலமாக நடைபெற்றது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால், அருள்தாஸ், ‘வத்திக்குச்சி’ திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தனுஷ், “தலைவரின் ‘பாட்ஷா’ படம் ரிலீஸானபோது நான் ரொம்ப சின்னப் பையன். 10 அல்லது 11 வயதிருக்கும். அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் காசெல்லாம் திருடி, விடியற்காலையில் இருந்து வரிசையில் நின்று, ஐந்தரை ரூபாய் டிக்கெட் எடுத்து முன் பெஞ்சில் அமர்ந்து கத்தி கத்திப் படம் பார்த்த ரசிகன் நான். அந்த ரசிகன், இன்று அவரை வைத்துப் படம் தயாரிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதனால், இது தனுஷ் என்ற ஒரு நடிகர் தயாரித்த படமல்ல, வெங்கடேஷ் பிரபு என்ற ஒரு ரசிகன் தயாரித்த படமாக இதைப் பார்க்கிறேன். அதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

முதலில் வில்லன், பிறகு குணச்சித்திர நடிகர், அப்புறம் ஹீரோ, அப்புறம் ஸ்டார், அப்புறம் ஸ்டைல் மன்னன், அப்புறம் சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை...” என்று பேச்சில் இடைவெளி விட, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்த தனுஷ், “அது இறைவன் கையில். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆக, ரஜினியின் அரசியல் பயணத்தைத்தான் அவர் சொல்லாமல் சொன்னார். அது தெரிந்துதான் ரசிகர் கூட்டம் அப்படி ஆர்ப்பரித்தது. ஆனால், அரசியல் பற்றிப் பேசாமல் ரஜினி பேச்சை முடித்துக் கொண்டதில் அனைவருக்கும் வருத்தமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x