Published : 16 Aug 2014 10:44 AM
Last Updated : 16 Aug 2014 10:44 AM

தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம்: முதல்வர் ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளாலான தோரணங்களைக் கட்டி, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து, குழந்தைகளை கண்ணனைப் போல் அலங்கரித்து, குழந்தைகளின் பாதச் சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து, அந்த குழந்தைக் கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.

குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும் மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்வுடன் வாழ்ந்திடலாம் என்ற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம் எனக் கூறி, மீண்டும் ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x