நாட்டிய ராணி: பாதியில் வெளியேறிய நாயகி; கதையை மாற்றிய தயாரிப்பு!

நாட்டிய ராணி: பாதியில் வெளியேறிய நாயகி; கதையை மாற்றிய தயாரிப்பு!
Updated on
2 min read

தமிழில் 1930-40 களில் வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர்களில் ஒருவர் பி.என்.ராவ். நடனத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய படம், ‘நாட்டிய ராணி’. வைஜயந்தி மாலாவின் தாய் வசுந்தரா தேவி நாயகியாக நடித்தார்.

மைசூரில் பிரபலமான கர்னாடக இசைக் கலைஞராக இருந்த பி.எஸ்.ராஜா அய்யங்கார் நாயகன். பி.எஸ்.சரோஜா, ஜெயம்மா, டி.எஸ்.பாலையா, ‘பம்பாய்’ சார்லி, நவநீதம் என பலர் நடித்தனர். இலங்கை நடிகை தவமணி தேவி சிறிய வேடத்தில் நடித்தார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார். பாஸ்கர் பிக்சர்ஸ் தயாரித்த இதன் கதை, வசனத்தை கம்பதாசன் எழுதினார்.

பாபநாசம் சிவனுடன், எஸ்.ராஜாராம் சில பாடல்களை எழுதினார். பழம்பெரும் இசைக்கலைஞர் டி.கே.பட்டம்மாள் மற்றும் நடிகர்-பாடகர் கொத்தமங்கலம் சீனு பின்னணி பாடினர்.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, நாயகி வசுந்தரா தேவி சில காரணங்களால் படத்திலிருந்து விலகிவிட்டார். அவர் நடித்த பாடல் மற்றும் நாட்டிய காட்சிகளை நீக்கிவிட்டு வேறு நாயகியை வைத்து மீண்டும் எடுத்தால் பட்ஜெட் தாங்காது என்று நினைத்தார் தயாரிப்பாளர். அதோடு அதைத் தூக்கி வீசவும் மனமில்லை. அப்போதுதான் அந்த ஐடியாவை சொன்னார், கதை, வசனத்தை எழுதிய கம்பதாசன்.

அதாவது வசுந்தரா தேவி நடித்த சாந்தலா என்ற கதாபாத்திரம் தீவிபத்தில் இறந்துபோய் ஆவியாக, மற்றொரு பெண்ணின் உடலுக்குள் புகுந்துவிட்டது. அந்தப்பெண் தான் இப்போது சாந்தலாவாக நடிக்கும் பி.எஸ்.சரோஜா என்று லாஜிக்காக வைக்கலாம் என்றார். அவர் ஐடியா ஒர்க் அவுட் ஆனது. தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். வசுந்தரா தேவியின் ஆவி இறங்கிய பெண்ணாக, சாந்தலா கதாபாத்திரத்தில் பி.எஸ்.சரோஜாவை நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள்.

இப்போது சின்னத்திரை தொடர்களில் ‘அவருக்கு பதில் இவர்’ என்று சப் டைட்டில் போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். ஆசிரமம் ஒன்றில் நாட்டியம் மற்றும் இசை கற்றும் தரும் சாதுவுக்கு சாந்தலா என்ற இளம் பெண் தினமும் பால் கொண்டு கொடுக்கிறாள். நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒருநாள் பார்க்கும் அவள், தான் நாட்டியம் பயின்று உயர்ந்த நிலையை அடைவதாகக் கனவு காண்கிறாள். இதைத் தனது தோழியிடம் சொல்ல, அவள் கேலி செய்கிறாள். கோபம் அடையும் அவள், சிவனை நோக்கி தவம் இருக்கிறார்.

அவள் முன் தோன்றும் சிவன் கேட்ட வரம் கொடுக்கிறார். இந்த நேரம் மன்னன் விஷ்ணுவர்தன், சாதுவைச் சென்று சந்திக்க, சாது நாட்டியம் குறித்து குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலைப் பாட, பால் கொண்டு வரும் சாந்தலா, ஆட ஆரம்பிக்கிறார். நாட்டிய முத்திரைகளைச் சரியாகக் கடைப்பிடித்து ஆடுவதைக் கண்டு இருவரும் வியக்கிறார்கள்.

மன்னன் விஷ்ணுவர்தன், சாந்தலாவின் நாட்டியத்திலும், அழகிலும் மயங்கி காந்தர்வ மணம் புரிகிறான். தக்க சமயத்தில் அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுக்கிறான். ஆனால், அந்த வாக்கை காப்பாற்றாததால் அரண்மனைக்கு சாந்தலா செல்கிறார். விஷ்ணுவர்தனுக்கு ஏற்கெனவே மனைவி இருப்பதை அறிகிறாள். சாந்தலா குறித்துத் தெரியவரும் ராணி, அவளைக் கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து எப்படித் தப்பித்து விஷ்ணுவர்தனுடன் ஒன்று சேர்கிறாள் என்பது கதை.

1949-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் நடனமும் பாடல்களும் கவனிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in