Published : 08 May 2018 03:49 PM
Last Updated : 08 May 2018 03:49 PM

அந்தப் படம் ஓடவே கூடாது: விஜய் மில்டன் காட்டம்

சினிமா துறையில் இருக்கும் எனக்கே அந்தப்படம் ஓடக்கூடாது என்று தோன்றுவது எவ்வளவு கேவலமான விஷயம் என்று இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், வைபவி, ஷாரா ஆகியோர் நடிப்பில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ஆபாச வசனங்கள், காட்சிகள், சைகைகள் இடம் பெற்றுள்ளதால் பாரதிராஜா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் படம் ஓடவே கூடாது என்று விஜய் மில்டன் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோ பதிவில் பேசியதாவது:

''அந்தப் படத்தின் ஸ்னீக் பீக் எனும் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தபோதே இந்தப் படம் ஓடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனக்கே கஷ்டமாக இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எனக்கே இந்தப்படம் ஓடக்கூடாது என்று தோன்றுவது எவ்வளவு கேவலமான விஷயம்.

என்னுடைய படம் ரிலீஸ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, கூட வரும் படங்களாக இருந்தாலும் மற்ற படங்களாக இருந்தாலும் ஏன் எந்தப் படமாக இருந்தாலும் ஓடினால்தான் சினிமா துறைக்கு நல்லது. ஒவ்வொரு தோற்கிற படத்திற்குப் பின்னாடி, ஒவ்வொரு ஜெயிச்ச படத்திற்கு இருக்கும் அதே அளவு உழைப்பும், வியர்வையும், கனவும் இருக்கிறது.

முன்னோட்டக் காட்சி ஏதோ போகிற போக்கில் பண்ணதில்லை. அதைப் பார்க்கும் போதே ஒற்றை வார்த்தையை மையமாகக் கொண்டுதான் முன்னோட்டக் காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். மிகத் தெளிவாக தாங்கள் செய்வது இன்னதென்று தெரிந்து செய்திருக்கிறார்கள். அந்த தைரியம் பயத்தைக் கொடுக்கிறது.

யாரோ முன்ன பின்னே தெரியாத ஒருத்தர் பண்ணியிருந்தால் கூட பரவாயில்லை. மிகவும் மதிக்கக்கூடிய சினிமா துறையில் முக்கியமான ஒருவர் இப்படத்தைத் தயாரித்திருப்பதால் அது மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் 'ஏ' படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை.

ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், இப்படிப் படமெடுத்தால்தான் ஓடும் என்று நினைத்து சிலர் படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்'' என்று விஜய் மில்டன் பேசியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x