Published : 09 May 2018 11:35 AM
Last Updated : 09 May 2018 11:35 AM

“சமூகத்தின் குரலுக்கான படமாக ‘டிராஃபிக் ராமசாமி’ இருக்கும் என்று நம்புகிறேன்” - சகாயம் ஐஏஎஸ்

‘சமூகத்தின் குரலுக்கான படமாக ‘டிராஃபிக் ராமசாமி’ இருக்கும் என்று நம்புகிறேன்’ என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார்.

நேர்மையான அதிகாரி என்று மக்களால் பாராட்டப்படும் சகாயம் ஐஏஎஸ், இந்தப் படத்தின் டீஸரை வெளியிட்டார். “டிராஃபிக் ராமசாமி ஒரு அரிதான சமூக செயற்பாட்டாளர். தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராகத் தொடங்கி, பல்வேறு தளங்களிலும் தன்னம்பிக்கையோடும் தன்னிச்சையாகவும் 85 வயதிலும் அநீதிக்கு எதிராகப் போராடிவரும் போராளி. அவரின் வாழ்வைப் பிரதிபலிக்கும் படமாக இது உருவாகியுள்ளது.

துணிச்சலான கருத்துகள் மூலம் தன் படங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், டிராஃபிக் ராமசாமியாக நடித்திருப்பதுடன், படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சகாயம் ஐஏஎஸ்.

இந்தப் படத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரன் மனைவியாக ரோகிணி நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, கஸ்தூரி, உபாசனா, மனோபாலா, மதன்பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன் என மிகப்பெரிய பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

'விசுவாசம்' படப்பிடிப்பு படங்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x