மிரட்டும் வாக்கின் ஃபீனிக்ஸ், லேடி காகா - ‘ஜோக்கர் 2’ ட்ரெய்லர் எப்படி?
சென்னை: வாக்கின் ஃபீனிக்ஸ், லேடி காகாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux)’ ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. வாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த வாக்கின் ஃபீனிக்ஸுக்கு இப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.
இப்படம் உலகம் முழுவதும் 1 பில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்து மிரட்டியது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மியூசிக்கல் திரைப்படமாக உருவாகி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இப்படத்தின் பிரபல பாப் பாடகியான லேடி காகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: பொது சமூகத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடக்கி வைத்திருக்கும் ஒருவரின் வெடித்தலே ‘ஜோக்கர்’ படத்தின் முதல் பாகத்தின் கதை. மனித உணர்வுகளை அழுத்தமாக பேசியிருக்கும் அந்தப் படம். அப்படத்தின் இறுதியில் டிவி தொகுப்பாளரை கொன்றுவிட்டு ஆதரவாளர்களிடையே நின்றுகொண்டிருப்பார் ஜோக்கர். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில் அவர் சிறையில் அடைக்கப்படுவது போல ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது மனநல பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரான லேடி காகா - ஜோக்கர் இடையே காதல் மலர்கிறது. ஆர்தர் ஃப்ளெக்கின் ஜோக்கர் அடையாளத்தை பறிக்கும் முயற்சிகள் நடக்க லேடிகாகாவுடன் இணைந்து அதனை அவர் எப்படி தடுக்கிறார் என்பதே படத்தின் கதை. எந்தவித பிரமாண்டங்களும் இல்லாமல், இயல்பாகவே நகரும் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக வாக்கின் ஃபீனிக்ஸ், லேடி காகாவின் நடிப்பு மிரட்டுகிறது. பெரும்பாலும் இசையே காட்சிகளில் ஆக்கிரமித்துள்ளது. படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
