கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ஷாருக்கான்
மும்பை: அவசர கண் அறுவை சிகிச்சைக்காக நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜானே ஜான்’ படத்தை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இந்தப் படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் ஷாருக்கானின் மகள் சுஹானா. மேலும் அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நடிகர் ஷாருக்கான் அவசர கண் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 29-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஷாருக்கான் சென்றுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கண்ணில் என்ன பிரச்சினை என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, மே மாதம் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டபோது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
