Published : 03 May 2018 04:41 PM
Last Updated : 03 May 2018 04:41 PM

அஜித் உதவி செய்தாரா, இல்லையா? சுசீந்திரன் ட்வீட்டால் சர்ச்சை

அஜித் உதவி செய்ததாக சுசீந்திரன் பதிவிட்ட ட்வீட்டால், கோடம்பாக்கத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

அஜித்தின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த சுசீந்திரன், ‘உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் ரோஜா ரமணன் என்ற உதவி இயக்குநர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அஜித் அவருக்குப் பண உதவி செய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இலக்கியன் என்பவர் இந்தத் தகவலை மறுத்துள்ளார். ‘இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரிதாக பண உதவி எதுவும் செய்யவில்லை. அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரைப் பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலைப் பரப்பி வருகிறார். இது நடந்த சமயம் ‘ஜனா’ பட ஷூட்டிங் கிடையாது, ‘வில்லன்’ பட ஷூட்டிங்’ என தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘நான் அஜித் சாரை மதிப்பவன். நண்பர் சுசீந்திரன் இவ்வளவு நாள் நண்பன் ரோஜா ரமணன் பெயரைப் பயன்படுத்தாமல், எந்த உதவியும் செய்யாமல், இப்போது தூசிதட்டி தன்னுடைய சுயநலத்துக்காக அஜித் சார் பிறந்த நாளுக்கு ரோஜா ரமணனை சம்பந்தப்படுத்தி வாழ்த்து தெரிவிக்கிறார். ஏன் இயக்குநராகவே வாழ்த்து தெரிவிக்கலாமே..? அந்த சமயத்தில் திரைப்படத்துறையில் நிறைய நல்ல மனிதர்கள் பணம் கொடுத்து உதவினர். இதில், அஜித் சாரை மட்டும் சுசீந்திரன் முன்நிறுத்துகிறார்.

இதற்கு முன்பும், அசோக் குமார் சார் மரணத்தில், ‘அஜித் சாரை மிரட்டினார்கள்’ என சுசீந்திரன் மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார். இவர் பெரிய இயக்குநர், அந்த தகுதி போதுமே அஜித் சார்கிட்ட கால்ஷீட் வாங்குவதற்கு! அதை விட்டுவிட்டு ஏன் தொடர்ந்து இந்த மாதிரி பதிவுகளை செய்கிறீர்கள்? என்பதே என் முன்பதிவின் விளக்கம். இதை அஜித் சார் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” எனவும் இலக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘வில் அம்பு’ படத்தின் இயக்குநரான ரமேஷ் சுப்ரமணியம், ‘எங்களது நண்பன் ரோஜா ரமணன் சிறுநீரகப் பாதிப்பால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவச் செலவிற்காக அதிகளவு பணம் தேவைப்பட்டது. அதற்காக அவன் நண்பர்களான நான், சுசீந்திரன், இலக்கியன் மற்றும் இப்போது இயக்குநர்களாக இருக்கும் ஸ்ரீ பாலாஜி, எஸ்.டி.சுரேஷ் குமார், கார்த்திகை முருகன், கணேஷ் பெருமாள் மேலும் நல்ல மனம் படைத்த உதவி இயக்குநர்கள் 30 பேர் சேர்ந்து திரைத்துறையில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் உதவி கேட்ட அத்தனை பேரும் இல்லை என்று மறுக்காமல் உதவி செய்தனர்.

இந்த நிலையில்தான் அஜித் சாரிடம் கேட்கலாம் என்று ‘வில்லன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றோம். 30 உதவி இயக்குநர்கள் சேர்ந்து ஒரு உதவி இயக்குநருக்காக உதவி கேட்டு வந்ததைப் பார்த்த அஜித் சார், எங்களை உடனடியாக சந்தித்தார். எங்களின் சார்பாக மூன்று பேரை மட்டும் அழைத்தார். நான், இலக்கியன், சுசீந்திரன் மூன்று பேரும் சென்று அவரிடம் பேசினோம். ரோஜா ரமணனின் நிலையை சொன்னோம். அவர் அடுத்து எதுவும் கேட்காமல் உடனடியாக, ‘ஆபரேஷன் பேக்கேஜ் அமவுண்ட் எவ்வளவு?’ என்று மட்டும் கேட்டார்.

அதற்கு நாங்கள், ‘ரோஜா ரமணனின் உடல்நிலை தேறிய பின்புதான் ஆபரேஷன் பற்றியே முடிவு செய்ய முடியும்’ என்று மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னோம். அதற்கு அவர் தன் மேனேஜர் ராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி பணம் கொடுக்கச் சொன்னார். மேனேஜர் ராஜா தானே மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனையின் பெயரிலேயே 20 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஒருவேளை ரோஜா ரமணனின் உடல்நிலை ஆபரேஷன் செய்துகொள்ளும் அளவிற்கு இருந்திருந்தால், ஆபரேஷனுக்காக முழுத்தொகையையும் அவரே தரும் எண்ணத்தில் தான் ‘ஆபரேஷன் பேக்கேஜ் அமவுண்ட் எவ்வளவு?’ என்று கேட்டார். இறுதியில் ரோஜா ரமணனை எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இது நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், உண்மையில் அஜித் சாருக்கு இதெல்லாம் நியாபகம் இருக்குமா என்றுகூடத் தெரியவில்லை’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆக, அஜித் உதவி செய்ததைப் பற்றி இவ்வளவு சர்ச்சைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அஜித் வாய் திறந்து சொன்னால் தான் உண்மை என்னவென்று தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x