Published : 30 May 2018 09:02 AM
Last Updated : 30 May 2018 09:02 AM

மற்றவர் வாழ்க்கையை வாழ்வது சுகம்: அர்த்தனா பினு நேர்காணல்

கேரள பூமியில் இருந்து தமிழ் திரையில் காலூன்றியிருக்கும் மற்றொரு நாயகி அர்த்தனா பினு. ‘தொண்டன்’, ‘செம’ படங்களைத் தொடர்ந்து ‘கடைக்குட்டிச் சிங்கம்’, ‘வெண்ணிலா கபடிக் குழு 2’ என அடுத்தடுத்து அர்த்தனாவின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. அவருடன் ஒரு நேர்காணல்..

பாவாடை - தாவணி என கிராமப் பின்னணி கதைகளாக அதிகம் தேர்வு செய்கிறீர்கள். உங்கள் பின்னணி?

சொந்த ஊர் திருவனந்தபுரம். வீடு, காலேஜ், ஷாப்பிங் என எப்பவும் ஃபேஷன் ஆடைகள்தான். இப்போ படப்பிடிப்புக்காகத்தான் முதன்முதலா பாவாடை தாவணி அணிந்தேன். புது அனுபவமாகத்தான் இருந்தது. இதுபோன்ற படங்களில் நடிக்கும்போதுதான் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியும்.

நாமும் கொஞ்ச நாட்களுக்கு மற்றவர் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறோமே என சந்தோஷப் பட்டுப்பேன். அது ஒரு சுகமும்கூட. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமையாதே.

நடிப்புக்கு வந்ததும் படிப்புக்கு முழுக்கு போடுவார்கள். நீங்கள் கல்லூரி, பாட்டு வகுப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறீர்களே?

பி.ஜி. டிப்ளமோ படிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் வகுப்பு. அதனால் நடிப்புக்கு தொந்தரவு இல்லை. படப்பிடிப்பு இருந்தாலும் சனிக்கிழமை மட்டும் இயக்குநர்கிட்ட அனுமதி வாங்கி வகுப்புக்கு ஓடிடுவேன். அந்த வாழ்க்கையையும் மிஸ் பண்ணக்கூடாது இல்லையா! அதேபோல பாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். என் ரூம்ல எப்போதும் பாடிட்டேதான் இருப்பேன். அம்மா, பிரெண்ட்ஸ் முன்னாடியும் அப்பப்போ பாடிக் காட்டுவேன். சினிமாவுல இதுவரை வாய்ப்பு கேட்டதில்லை. என் குரல் பிடித்திருந்தால் அவர்களாக அழைத்து வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

அர்த்தனா ஓகே.. அதென்ன பினு?

பொதுவாக அப்பா பெயரைத்தான் எல்லோரும் தங்கள் பெயரின் பின்னால் இணைத்துக் கொள்வார்கள். இதில் நான் கொஞ்சம் வித்தியாசம். பினு என் அம்மா பெயர். பிறந்தது முதல் இப்போ வரைக்கும் எனக்காக வாழ்பவர் என் அம்மா. நான்தான் அவரது உலகம். அவர்தான் என் உலகம். நாளைக்கு திருமணம் ஆனாலும்கூட இந்தப் பெயரோடுதான் இருப்பேன்.

மூன்று, நான்கு படங்கள் கடந்தாச்சு. ஆனாலும், ‘தலையாளம்’தான் பேசுகிறீர்கள். தமிழில் ஏன் தடுமாற்றம்?

தமிழ் மீது எனக்கு ஏற்கெனவே ஒரு ஈர்ப்பு உண்டு. தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே கொஞ்சம் தமிழ் பேசத் தெரியும். கொஞ்சம்தான். நான் பேசுற தமிழ் ஆரம்பகட்டம்கூட இல்லை என்பது இங்கே வந்த பிறகுதான் தெரியுது. இப்போது தமிழ் கற்பதில் முழு மூச்சாக இறங்கிட்டேன்.

‘வெண்ணிலா கபடிக் குழு 2’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதா?

ரிலீஸுக்கு முந்தைய இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. அடுத்தடுத்து வரும் படங்கள் அனைத்தும் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்து, நல்ல பேரையும் வாங்கித் தரும் என்று நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x