Published : 20 May 2018 05:59 PM
Last Updated : 20 May 2018 05:59 PM

“சாவித்ரிக்கு குடியைக் கற்றுக் கொடுத்தது அப்பா இல்லை” - கமலா செல்வராஜ் விளக்கம்

‘சாவித்ரிக்கு குடியைக் கற்றுக் கொடுத்தது அப்பா இல்லை’ என மருத்துவர் கமலா செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ரிலீஸாகியிருக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் வெளியான இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

படம் பார்த்த அனைவருக்கும், படம் ரொம்பவே பிடித்துவிட்டது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவைப் பற்றிப் படத்தில் தவறாகக் காட்சிப்படுத்தியுள்ளதாக ஜெமினி கணேசன் மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், “சாவித்ரி - ஜெமினி கணேசன் வாழ்க்கை எல்லாருக்குமே தெரியும். ஆனால், எங்களிடம் எதையும் கேட்காமல், ஒருபக்கம் மட்டும் ஆதரவாகப் படத்தை எடுத்துள்ளனர். கணவன் - மனைவியைப் பற்றிப் படமெடுக்கும்போது, மனைவிக்குத் தெரிந்தவர்களிடம் மட்டும் தகவல்களைக் கேட்டு எடுத்தால் எது உண்மை? எது பொய்? எனத் தெரியாது.

அப்பாவைப் பற்றியும் அந்தப் படத்தில் கூறப்பட்டிருந்தால், அவரைப் பற்றிய தகவல்கள் எதையும் எங்களிடம் கேட்கவில்லை. இதனால், சாவித்ரி அம்மாவை மட்டும் உயர்த்தி, எங்கள் அப்பாவை மட்டம் தட்டியது போல் ஆகிவிட்டது.

படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளால் எங்கள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அப்பா தான் சாவித்ரி பின்னால் சுற்றியதாகக் காண்பித்திருக்கிறார்கள். அடிக்கடி வெளியில் சுற்றி, காதல் வார்த்தைகள் கூறி கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது அப்படி கிடையாது. அப்பா மிகவும் ஒழுக்கமானவர்.

சாவித்ரிக்கு குடிக்கச் சொல்லிக் கொடுத்தவர் அப்பா தான் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே சாவித்ரி சினிமாத்துறையில் இருந்தார். இந்தப் பழக்க வழக்கம் சினிமாவில் நிறைய பேருக்கு சகஜம். அதனால், புதிதாக எதையும் எங்கள் அப்பா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. அப்படி எங்கள் அப்பா தான் குடிக்க சொல்லிக் கொடுத்தார் என்றால், எங்கள் அம்மாவும் குடிகாரியாய் ஆகியிருந்திருக்கலாமே... எங்களைத் தாறுமாறாக வளர்த்திருக்கலாமே... ஆனால், அப்படி வளர்க்கவில்லை.

விஜய சாமுண்டீஸ்வரி, சதீஷ் இருவருக்கும் ‘நான் தான் அப்பா’ என்று எங்கள் அப்பா சொல்லியதால்தான், சாவித்ரிக்கும் மரியாதை கிடைத்தது. அந்த வகையில் அப்பா மிகவும் பெருமைக்குரியவர். மற்றவர்கள் அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார் கமலா செல்வராஜ்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘மகாநடி’ படத்துக்காக டப்பிங் பேசிய கீர்த்தி சுரேஷ் - வீடியோ

போதை மருந்து விற்கும் நயன்தாரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x