Published : 21 May 2018 05:03 PM
Last Updated : 21 May 2018 05:03 PM

“ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள எனக்கு வெட்கமாக இருக்கிறது” - விஷால்

‘ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என விஷால் தெரிவித்துள்ளார்.

வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விஷால், சிறுவர்களின் தற்காப்புக் கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். “நான் ஆக்‌ஷன் ஹீரோ என சொல்லிக்கொள்ள இனிமேல் வெட்கப்படுவேன் என்று நினைக்கிறேன். ‘நான் பண்றதுதான் சூப்பர் ஆக்‌ஷன்’ என என் வீட்டில் எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை இந்த விழாவுக்கு என் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இந்தச் சிறுவர்கள் கலக்கியது உண்மையிலேயே எனக்கு ஊக்கமான விஷயம். இந்தப் படத்தின் இயக்குநர் விஜிக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். மிகச்சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நாங்கள் பள்ளி விழாக்களுக்குச் செல்லும்போது முக்கியமாகக் குறிப்பிடும் விஷயம், குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என கற்றுக் கொடுங்கள் என்பதுதான். ஏனென்றால், இன்றைக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு என்பது அதிகமாகி விட்டது. இந்தப் படம் மூலம் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை சொல்லிக் கொடுப்பது அதிகமாகும் என நினைக்கிறேன்.

செயின் பறிப்பைத் தடுப்பது எப்படி? என இங்கேயே செய்து காண்பித்தனர். உண்மையில், இதைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க ஜாக்கிசான் தான் வந்திருக்க வேண்டும். நாங்கள் வந்திருக்கக் கூடாது. அவர்களுடைய பெர்ஃபாமன்ஸை விட, அவர்கள் முகங்களில் தெரிந்த தன்னம்பிக்கை தான் எனக்குப் பெரிதாகத் தெரிந்தது.

உதவி இயக்குநராக இருந்து ‘செல்லமே’ படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, உடல் நெகிழ்வுக்காக டேக்வாண்டோ கற்றுக்கொண்டேன். ஆனால், இவர்கள் முன்னால் அது கால் தூசிக்குச் சமம். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, மறுபடியும் தற்காப்புக் கலை கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது” என்று பேசினார் விஷால்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x