Published : 23 May 2018 06:03 PM
Last Updated : 23 May 2018 06:03 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக முதல்வர் மீது சித்தார்த் காட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்றும் (மே 23) தூத்துக்குடியில் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது தொடர்பாக ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு திரையுலகினர் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்த நடிகர் சித்தார்த், மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''சட்டம் ஒழுங்கை காப்பவர்கள் கையிலும், அரசாங்கத்தின் கையிலும் தமிழகம் இப்படிப்பட்ட ஒரு குரூரத்தை சந்திக்கக் கூடாது. நாம் சர்வாதிகாரிகளால் ஆளப்படுகிறோம். பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு, கேள்வியின்றி கொல்லப்படுகிறோம். இந்த அருவறுப்பான வீடியோவில் புகழப்படுபவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.''

இவ்வாறு ட்வீட் செய்த சித்தார்த் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோ விளம்பர லிங்கை ஷேர் செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x