

பெங்களூரு: “இதுபோன்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எல்லாம் விதி” என கன்னட நடிகர் தர்ஷன் கைது மற்றும் ரசிகர் ரேணுகா சுவாமி கொலை குறித்து சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னட தயாரிப்பாளர் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விதி என்று ஒன்று உள்ளது. விதியை நாம் மாற்ற முடியாது. எதையாவது சொல்வதற்கு முன் சொல்வது சரிதானா என்பதை அவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கின்றன.
ரேணுகா சுவாமி மற்றும் தர்ஷன் ஆகிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வேதனை அடைந்துள்ளனர். தர்ஷன் மகனை எண்ணி எனக்கு வருத்தமாக உள்ளது. நாம் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் தர்ஷன் தொடர்பான விசாரணை குறித்தகேள்விக்கு, “முடிவுக்காக காத்திருப்போம். நடக்க வேண்டியது நடக்கும். இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை. எல்லாம் விதி.” என்று பதிலளித்தார். ரசிகர் ரேணுகாசுவாமியை ஆள் வைத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.