மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

Published on

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில் நடித்த படம் ’மாமன்னன்’. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கிவந்தார். குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கும் மற்றொரு புதிய படத்துக்கு ‘பைசன் காளமாடன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இதனை தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்படம் கபடியை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்துடன் புகைப்படம் ஒன்றையும் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் துருவ் விக்ரமின் தோளில் மாரி செல்வராஜ் கைபோட்டபடி திரும்பி நிற்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in