‘ஹமாரே பாரா’ பாலிவுட் படத்தை திரையிட கர்நாடக அரசு தற்காலிக தடை 

‘ஹமாரே பாரா’ பாலிவுட் படத்தை திரையிட கர்நாடக அரசு தற்காலிக தடை 

Published on

பெங்களூரு: இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருக்கும் ‘ஹமாரே பாரா’ (Hamare Baarah) பாலிவுட் படத்துக்கு தடை விதிக்க கோரி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், படத்துக்கு தற்காலிக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கமல் சந்த்ரா இயக்கத்தில் அன்னு கபூர், மனோஜ் ஜோஷி, பரிதோஷ் திரிபாதி மற்றும் பலர் நடித்துள்ள பாலிவுட் படம் ’ஹமாரே பாரா’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன. இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள மனைவியைக் கொடுமைப்படுத்துவதாக கூறுவதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இப்படம் தூண்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இப்படத்தை தடை விதிக்க கோரி பல இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின.

படம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை கருத்தில் கொண்டும், கர்நாடக அரசு சினிமா ஒழுங்குமுறை சட்டம், 1964-ன் கீழ் படத்தை 2 வாரங்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உள்துறை இணைச் செயலாளர் பி.கே.புவனேந்திர குமார் மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள், திரையரங்குகள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிற ஊடகங்களில் படம் மற்றும் அதன் ட்ரெய்லரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in