பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் பின்தங்கும் ‘நடிகர்’, ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’
திருவனந்தபுரம்: மலையாளத்தில் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர நடிகர்களின் படங்களான ‘நடிகர்’ மற்றும் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ படங்கள் ரசிகர்களிடையே பெற்ற கலவையான விமர்சனங்களால் வசூலில் பின்தங்கி வருகின்றன.
நடிகர்: லால் ஜூனியர் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நடிகர்’. சவுபின் ஷாஹிர், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யாக்சன் கேரி மற்றும் நேஹா நாயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். முன்னதாக, இப்படத்துக்கு ‘நடிகர் திலகம்’ என பெயரிடப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. சினிமாவில் வலம் வரும் நடிகர் ஒருவரின் கதையைப் பேசும் இப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. முதல் நாள் ரூ.1.35 கோடியை வசூலித்த இப்படத்தின் அடுத்தடுத்த நாட்கள் வசூல் லட்சங்கள் என சுருங்கின. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக வெளியான 5 நாட்களில் ரூ.4 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.
மலையாளி ஃபரம் இந்தியா: மலையாளத்தில் வெளியான ‘ஜன கண மன’ படத்தின் மூலம் திரையுலகில் அழுத்தமாக கால்பதித்தவர் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இவரது இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள படம் ‘மலையாளி ஃபரம் இந்தியா’. அனஸ்வரா ராஜன், தயன் ஸ்ரீனிவாசன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜன கண மன’ பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநரின் அடுத்த படைப்பு என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மே 1-ம் தேதி படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
‘அயற்சி’ கொடுக்கும் திரைக்கதை என விமர்சிக்கப்பட்டது. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், முதல் நாளில் ரூ.2.9 கோடியை வசூலித்தது. 2ம் நாள் ரூ.1.3 கோடியையும், அடுத்தடுத்த நாளில் வசூல் குறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படம் இதுவரை மொத்தம் ரூ.8 கோடியை வசூலித்துள்ளது.
