

சென்னை: லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிமுக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து ‘ரஜினி 171’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் அவரும், ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்த ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் அண்மையில் வெளியானது. இயக்குநராக இருந்து நடிகராக அறிமுகமாகி தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். இந்நிலையில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இப்படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.