Last Updated : 18 Nov, 2017 07:58 PM

 

Published : 18 Nov 2017 07:58 PM
Last Updated : 18 Nov 2017 07:58 PM

ஊரெல்லாம் உன்னைப் பார்த்து வியந்தாரா?

நதியா, நதியா, நைல் நதியா..

கொண்டையில் தாழம்பூ.. கூடையில் என்ன பூ? குஷ்பு..

மீனாப் பொண்ணு.. மீனாப் பொண்ணு.. இப்படியான பாடல்களின் வரிசையில் ஒரு கதாநாயகியை மையப்படுத்திப் பாடும் பாடலாக வந்ததுதான் 'ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா' பாடல்.

ஆனால், நதியா, குஷ்பு, மீனா போன்ற திரை நட்சத்திரங்களைவிடவும் திரைத்துறையில் நயன்தாரா எட்டிப்பிடித்து தக்கவைத்திருக்கும் இடம் ஆழமானது, அழுத்தமானது. ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் திரையுலகில் நயன்தாரா எட்டியிருக்கும் இந்த இலக்கை 'வாழ்த்துகள் நயன்' என்றுமட்டும் சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. அதனால்தான் அவரது பிறந்தநாளான இன்று (நவம்பர் 18) ஒரு வாழ்த்து மடலாக இதை சொல்ல விழைகிறேன்.

நானும் நயன்தாரா ரசிகை என்பதை சொல்லிக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனாலேயே, ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன் 'நயன், நீங்கள் இனி எப்போதும் ‘வில்லு’ போன்ற ஒரு படத்தில் நடித்துவிடாதீர்கள்'. இப்போது வாழ்த்துக்கு வருவோம்.

அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தில் அவர் பேசும் வசனம் இது, "ஒரு பொண்ணு கலெக்டரா ஆகறது ஈஸி.. ஆனா ஒரு பொண்ணா இந்த அதிகாரத்துக்கு நடுவுல வாழறது ரொம்ப கஷ்டம்" அதை அப்படியே நயன்தாராவின் திரை வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்ப்போம். ஒரு பொண்ணு நடிகை ஆகறது ஈஸி.. ஆனா ஒரு பொண்ணா திரைத் துறையில் இருக்கும் ஆணாதிக்கத்துக்கு நடுவுல வாழறது ரொம்ப கஷ்டம்". நயன்தாரா இத்தனை உயரத்துக்கு வந்ததன் பின்னணியில் அவருக்கான சிறப்பான கதைகளை உருவாக்கிய ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கதாநாயகிக்காக கதையை யோசிக்க வைத்தவர் நயன்தாரா என்பதுதான் அவர் ஆற்றியிருக்கும் சாதனை.

அவ்வளவு சாதாரணமாக எந்த ஒரு நடிகையாலும் அந்த இடத்தை அடைந்துவிட முடியாது. தன்னுடைய மார்க்கெட் போய்விடக்கூடாது என்பதற்காக சற்றும் மாற்றிக் கொள்ளாமல் டூயட், கிளாமர் என்று ஒரு படத்தில் தனக்கான அங்கீகாரம் அடையாளம் என்னவென்பது குறித்து சற்றும் யோசிக்காமல் மார்க்கெட்டின் போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் ‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’.. என்று நாயகிக்காகவே கதைகளை யோசிக்க வைத்திருப்பதுதான் நயன்தாராவின் வெற்றியின் ரகசியம். ஆரம்ப நாட்களில் நயன்தாராவும் கமாடிட்டி ஹீரோயினாகவே இருந்திருக்கிறார். ஆனால், அதிலிருந்து விடுபட்டு வித்தியாசமாக யோசித்தாரல்லவா, தனக்கான களத்தை தகவமைத்துக் கொண்டாரல்லவா? அதுதான் அவரது சக்சஸ்.

வித்யாபாலனின் அழுத்தமான நடிப்பில் வெளியான ‘கஹானி’யை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்தபோது அத்தனை ஹீரோயின்கள் இருக்க நயன்தாராவுக்குதானே அந்த வாய்ப்பு வந்தது. வித்யாபாலன் அளவுக்கு சிறப்பாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்தாமல் போனது வித்யாபாலனின் சாதனையே தவிர நயன்தாராவின் தோல்வி அல்ல. அறத்தை இந்தியிலோ தெலுங்கிலோ வேறு நடிகையை வைத்து யோசிக்க முடியாதல்லவா, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’-வை மஞ்சுவாரியைவிட யாரும் சிறப்பாக செய்துவிட முடியாதல்லவா. அதைப்போன்றதே ‘கஹானி’.

மற்றபடி, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை நோக்கி சக நடிகைகளை நகர வைத்திருக்கும் நயன்தாரா நிச்சயம் ஒரு முன்னோடிதான். சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் என நடிகர்களுக்கான பட்டங்களை அள்ளித்தரும் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பேச்சுக்களை சமூக வலைதளங்களிலாவது அடைந்திருப்பவர் நடிகை நயன்தாரா மட்டுமே.

மலையாளத்தில் வெளியான 'புதிய நியாயம்' படத்தில் வாசுகியாக வலம்வந்த நயன்தாராவை யாராலும் மறக்க முடியாது. மம்முட்டி ஏன் இந்த படத்துக்கு ஒப்புக்கொண்டார்? என்று மலையாள திரையுலகம் கேள்விகளை முன்வைக்கும் அளவுக்கு வாசுகி அந்தப் படத்தில் வியாபித்திருந்தார். நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாட இதுபோன்ற துணிச்சலான கதைக்களங்கள், சவாலான கதாபாத்திரங்கள் அவர் தேர்வு செய்வது தவிர வேறு என்ன காரணமாக இருந்துவிட முடியும்?

நயன்தாரா நீங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. நடிகைகளுக்கான கதையை யோசிக்க வைத்த நீங்கள் சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்பதையும் திரைத்துறையில் சாதித்துக் காட்ட வேண்டும். திரைவானில் ஒளிரும் இன்னும் சிறப்பாக ஒளிரக்கூடிய நயன்தாராவை தோழர் என்றும் அரசியலுக்கு வரலாம் என்றும் விமர்சித்து நேரத்தை வீணாக்காமல் திரைத்துறையில் அவரது சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிப்போம்.

நடிப்பைத் தாண்டி உங்கள் திடமும் துணிச்சலும் எனக்குப் பிடிக்கும் நயன். வெறும் நட்சத்திரமல்ல நீங்கள். அது எனக்குத் தெரியும். இன்னும் பலருக்கும் தெரியும் நாள் வரும்!

பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x