Published : 19 Apr 2018 05:18 PM
Last Updated : 19 Apr 2018 05:18 PM

காவிரி விவகாரம்: புதிய படங்கள் வெளியிடுவதை கோலிவுட் நிறுத்துமா?- ஜெ. அன்பழகனின் கேள்வியும் எடிட்டர் ரூபனின் பதிலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தமிழ் சினிமா (கோலிவுட்) நிறுத்துமா? என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு எடிட்டர் ரூபன் பதில் அளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக, ஐபிஎல்லை இடம் மாற்றக்கோரி பலரும் குரல் கொடுத்தனர்; போராட்டங்களும் நடைபெற்றன. அதனால் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த 47 நாட்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நாளை முதல் புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன. எனவே, ஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் கூட ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். ஆர்.ஜே. பாலாஜியும் இதே கேள்வியைக் கேட்டார்.

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தன் ட்விட்டர் பக்கத்தில், ''ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடக்கவிடாமல் செய்து தேசிய அளவில் கவனம் ஈர்த்த கோலிவுட்டைச் சேர்த்தவர்களின் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். இவ்வாறே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குவரை புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தமிழ் சினிமா (கோலிவுட்) தடுக்குமா?” என்று பதிவிட்டார்.

ஜெ. அன்பழகனின் பதிவை எடிட்டர்  ரூபன் குறிப்பிட்டு, "இதில் வித்தியாசம் உள்ளது சார். ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக கோலிவுட்டைச் சேர்ந்த சிலர் நடத்திய போராட்டத்துக்கு  நான் உட்பட பலரும் எதிராகவே இருந்தோம். கோலிவுட் வெறும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமல்ல, குடும்பம் மற்றும் வாழ்வாதாரத்தைச் சார்ந்தது. ஒரு எடிட்டராக பலர் வேலை இழந்து இருப்பதை நான் பார்க்கிறேன். சினிமா ஏற்கெனவே இறந்து கொண்டிருக்கிறது”என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x